Aug 19, 2025 - 12:37 PM -
0
ஹட்ச் நிறுவனம், ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற Future Connect என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக, 2025 ஜுலை 17 அன்று ராகம, வல்பொலவிலுள்ள தனது பொறியியல் வளாகத்திற்கு (தரவு மையம்) விரிவான தொழில்துறை கல்விச் சுற்றுலாவுக்காக பட்டதாரி மாணவர்கள் அடங்கிய குழுவொன்றை வரவழைத்துள்ளது.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி கற்கைபீடத்தின் பட்டதாரி மாணவர்கள் இந்த வருகையின் போது, முன்னணி தொலைதொடர்பாடல் சேவை வழங்கல் நிறுவனமொன்றிடமிருந்து பிரதான தொழில்நுட்ப கட்டமைப்பு குறித்த நேரடி அனுபவத்தைப் பெற்றுள்ளனர். தொலைதொடர்பு கோபுரங்கள், உபகரணங்கள், மற்றும் அடித்தள கட்டமைப்புக்கள், தரவு மையச் சூழல் கட்டுப்பாடு மற்றும் அணுகல் கட்டுப்பாடு மற்றும் வலையமைப்பு தொழிற்பாடுகள் மையத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான தொழிற்பாட்டுத் துறைகளை அவர்கள் ஆராய்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
மாணவர்கள் தமது துறைசார் கற்றல் அறிவை, நடைமுறை ரீதியான பொறியியல் செயன்முறைகளுடன் இணைத்துக்கொள்ள உதவும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5G, IoT ஒருங்கிணைப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மற்றும் இந்த புத்தாக்கங்களை பாரியளவில் அமுல்படுத்துதற்குத் தேவையான உதவிக் கட்டமைப்புக்கள் போன்ற விடயங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.
ஹட்ச் நிறுவனத்தின் சார்பில் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “அர்த்தமுள்ள வழியில் நேரடி அனுபவத்தை வழங்கி, தொழில்நுட்பம் சார்ந்த துறையின் அடுத்த தலைமுறைக்கு வலுவூட்டுவதில் ஹட்ச் நிறுவனம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டமானது வெறுமனே ஒரு இடத்திற்கான கல்விச் சுற்றுலா என்பதற்கும் அப்பாற்பட்டது. நிஜ உலகின் தொலைதொடர்பாடல் கட்டமைப்பினை எவ்வாறு திறன்மிக்க பொறியியல் அணிகள் நிர்வகித்து மற்றும் பேணிப் பராமரிக்கின்றன என்பதை நேரடியாக காணும் வாய்ப்பினை இது மாணவர்களுக்கு வழங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி கற்கை பீடத்தின், கணினி விஞ்ஞானத் துறையின் தலைவர் கலாநிதி டி.ஜி.என்.டி. ஜெயரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “Future Connect போன்ற முயற்சிகளினூடாக கல்வித்துறைக்கு ஆதரவளிப்பதில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக ஹட்ச் நிறுவனத்தை நாம் போற்றுகிறோம். எமது மாணவர்கள் தாம் வகுப்பறைகளில் கற்கின்றவற்றை கோட்பாடுகளாக மாற்றுவதற்கும், தொலைதொடர்பாடல் துறையின் நோக்கங்களை விளங்கிக் கொள்வதற்கும், மற்றும் தற்போதைய மற்றும் வளர்ச்சி கண்டு வருகின்ற தொழில்நுட்பங்களில் அர்த்தமுள்ள ஈடுபாடுகளை மேற்கொள்ளவும் இது போன்ற அனுபவங்கள் அவர்களுக்கு உதவுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
இந்த அமர்வைத் தொடர்ந்து, ஈடுபாடுகளை வளர்க்கும் வகையில் கேள்வி-பதில் நிகழ்வும் இடம்பெற்றதுடன், மாணவர்கள் ஹட்ச் நிறுவனத்தின் பொறியியல் தொழில் வல்லுனர்களிடம் தமது கேள்விகளை நேரடியாகக் கேட்டு, விடைகளைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கப்பட்டது. Future Connect போன்ற முயற்சிகளின் மீது தொடர்ந்து முதலீடு செய்வதனூடாக, எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கத் தயாராகவுள்ள திறமைசாலிகளை வளர்த்து, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திற்கு உந்துசக்தியளித்து, மற்றும் தேசத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதே ஹட்ச் நிறுவனத்தின் நோக்கம்.