வணிகம்
கொமர்ஷல் வங்கி ரூ.3 டிரில்லியன் சொத்துக்களைக் கொண்ட முதல் தனியார் துறை வங்கியாக இரண்டாவது காலாண்டில் வரலாறு படைத்துள்ளது

Aug 21, 2025 - 03:35 PM -

0

கொமர்ஷல் வங்கி ரூ.3 டிரில்லியன் சொத்துக்களைக் கொண்ட முதல் தனியார் துறை வங்கியாக இரண்டாவது காலாண்டில் வரலாறு படைத்துள்ளது

கொமர்ஷல் வங்கியானது ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் நிறுவனக் குழுமம் மற்றும் வங்கி மட்டத்தில், முக்கிய செயற்றிறன் குறிகாட்டிகளில் ஏற்பட்ட உறுதியான வளர்ச்சியின் காரணமாக, 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ரூ.3 டிரில்லியன் சொத்துக்களைத் தாண்டிய இலங்கையின் முதல் தனியார் துறை வங்கியாக முத்திரை பதித்துள்ளது. 

இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கியாக, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டிணைந்த நிறுவனத்தை உள்ளடக்கிய இக் குழுமமானது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 3.13 டிரில்லியன் எனவும், கொமர்ஷல் வங்கியின் சொத்துக்கள் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தின் முடிவில் ரூ. 3.03 டிரில்லியன் எனவும், கடந்த ஆறு மாதக் காலப்பகுதியில் முறையே ரூ. 255 பில்லியன் (8.88%) மற்றும் ரூ. 242 பில்லியன் (8.66%) வளர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ஆறு மாதங்களுக்கான குழுமத்தின் மொத்த வருமானம் 8.53% ஆல் அதிகரித்து ரூ. 177.04 பில்லியனாக உயர்ந்துள்ள அதே நேரத்தில் வட்டி வருமானம் 5.31% ஆல் அதிகரித்து ரூ. 146.65 பில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் வட்டிச் செலவீனங்கள் 3.48% ஆல் குறைவடைந்து ரூ. 77.84 பில்லியனாக பதிவுசெய்யப்பட்டதின் விளைவாக நிகர வட்டி வருமானமானது 17.39% ஆல் அதிகரித்து ரூ. 68.81 பில்லியனாக உள்ளது. 

மொத்த செயற்பாட்டு வருமானம் 20.06% ஆல் அதிகரித்து ரூ. 92.76 பில்லியனாக உள்ள அதே நேரத்தில் குழுமத்தின் வலுக்குறைவுச் செலவுகள் (Impairment Charges) மற்றும் இதர நட்டங்களுக்கான ஏற்பாடுகள் 40.41% ஆல் குறைந்து ரூ. 11.33 பில்லியனாக உள்ளது. வங்கி வைத்திருந்த இலங்கை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களுக்கான (SLISBs) மேலதிக ஒதுக்கீடுகள் மற்றும் கடந்த ஆண்டின் நிதிநிலை மேலாண்மை என்பன இவ்வடைவிற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 

இதன் விளைவாக, கடந்த ஆறு மாதங்களுக்கான நிகர செயற்பாட்டு வருமானம் 39.81% ஆல் அதிகரித்து ரூ. 81.43 பில்லியனாக உயர்ந்துள்ளது. செயற்பாட்டுச் செலவீனங்களுக்கான வளர்ச்சியை 5.62% ஆல் ரூ. 25.84 பில்லியனாகக் குறைத்ததன் விளைவாக, நிதிச் சேவைகள் மீதான வரிகளுக்கு முந்தைய செயற்பாட்டு லாபமானது 64.57% ஆல் அதிகரித்து ரூ. 55.59 பில்லியனாக உயர்ந்துள்ளது. 

நிதியியல் சேவைகள் மீதான வரிகள் 88.30% ஆல் அதிகரித்து ரூ. 8.77 பில்லியனாக உயர்ந்துள்ளதன் விளைவாக கடந்த ஆறு மாத காலப்பகுதிக்கான குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ. 46.81 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது 60.77% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் குழுமமானது ரூ. 31.17 பில்லியனை நிகர லாபமாக ஈட்டியுள்ளதுடன், வருமான வரியானது 53.14% ஆல் அதிகரித்து ரூ. 15.65 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 64.90% கீழ்நிலை வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. 

தனித்தனியாக எடுத்துக்கொண்டால், கொமர்ஷல் பேங்க் ஒஃப் சிலோன் பிஎல்சியானது கடந்த ஆறு மாதங்களுக்கு வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 45.24 பில்லியனையும் வரிக்கு பிந்திய லாபமாக ரூ. 30.05 பில்லியனையும் பதிவு செய்துள்ளது, இது முறையே 61.47% மற்றும் 66.05% வளர்ச்சியாகும். இந்த முடிவுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன், எமது முதல் அரையாண்டிற்கான செயற்றிறனானது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. முதற் காலாண்டின் உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது காலாண்டை இன்னும் வலுவானதாக நாம் பதிவு செய்துள்ளோம். சந்தை வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதிலும், வெளிப்புறச் சவால்களைத் திறமையாகக் கையாள்வதிலும் வங்கியானது மிகுந்த செயலாக்கத்துடனும், விவேகத்துடனும் செயற்பட்டுள்ள அதே நேரத்தில் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும் சிறந்து விளங்குவதற்கான ஓர் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிலைநிறுத்தியுள்ளது. மூலோபாய ரீதியில் நிலைபேறான வளர்ச்சியை நிலைநிறுத்தியிருப்பதோடு வங்கியானது முன்னெப்போதும் இல்லாதவகையில் மிகவலுவாக தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது. 

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கூறுகையில், நிறுவனக் குழுமமும் வங்கியும் அடைந்துள்ள பெறுபேறுகள், முக்கிய வங்கியியல் குறிகாட்டிகளில் முக்கிய கவனத்தையீர்த்துள்ளதுடன், வெளிப்புறச்சவால்களையும் விவேகமான முறையில் கையாண்டு அனைத்து வருமான வழிகளிலும் வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய வர்த்தகச் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் எங்கள் வாடிக்கையாளர்களின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைத் துல்லியமாகக் கண்காணித்து வருவதோடு இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் நாம் தயாராக இருக்கிறோம், என்று அவர் மேலும் கூறினார். 

இந்த நிறுவனக் குழுமமானது கடன் வழங்குவதில் முனைப்பாகச் செயற்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டின் முதற் பாதியில் ரூ. 1.731 டிரில்லியனை மொத்த கடன்கள் மற்றும் முற்பணத் தொகையாகப் பதிவுசெய்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ரூ. 206 பில்லியன் அல்லது 13.50% வளர்ச்சியாகும் என்பதோடு சராசரியாக மாதாந்தம் ரூ. 34.33 பில்லியனை கடன்களாகவும் வழங்கியது. 

இரண்டாவது காலாண்டில் குழுமத்தின் வைப்புத்தொகையானது ரூ. 2.5 டிரில்லியனைத் தாண்டி, ரூ. 200 பில்லியன் அல்லது 8.66% வளர்ச்சியையும் பதிவு செய்து ஜூன் 30, 2025 இல் ரூ. 2.51 டிரில்லியனாக ஓர் மைல்கல்லை எட்டியுள்ளது. இது ரூ. 33.27 பில்லியன் சராசரி மாதாந்த வளர்ச்சியைக் குறிக்கிறது. 

உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகத் திகழும் கொமர்ஷல் வங்கி,கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05