Aug 22, 2025 - 03:45 PM -
0
கொமர்ஷல் வங்கியானது ஐக்கிய ராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வ நிதியியல் துறை வெளியீடான தி பேங்கரால் உலகின் சிறந்த 1000 வங்கிகள் பட்டியலில் மீண்டும் ஒருமுறை இடம்பிடித்துள்ளது, இதன் மூலம் கொமர்ஷல் வங்கியானது இந்த மைல்கல்லை 13 முறை எட்டிய ஒரே இலங்கை வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
2011 ஆம் ஆண்டில் முதல் 1000 இடங்களுக்குள் இடம்பிடித்த முதலாவது இலங்கை வங்கியான கொமர்ஷல் வங்கி, இந்த மதிப்புமிக்க உலகளாவிய தரவரிசையின் 2025 பதிப்பில் 931 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, இதன்மூலம் உலகின் வலிமையான வங்கி நிறுவனங்களின் உறுதியான பட்டியலில் இலங்கையில் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள தனியார் துறை வங்கி என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த சாதனை தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, உலகின் முதல் 1000 வங்கிகளில் 13 முறை இடம்பிடித்திருப்பதானது, எமது நாட்டின் வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டங்களில் நிதி வலிமை, நிர்வாகம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றிற்கான எமது இடையறாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். சவாலான உலகளாவிய மற்றும் உள்நாட்டு செயல்பாட்டு சூழல் இருந்தபோதிலும், நாம் தொடர்ந்து சிறந்த அடிப்படைகள் மற்றும் மூலோபாய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தி வருகிறோம், என்றார்.
உலகின் 5,000க்கும் மேற்பட்ட பாரிய வங்கிகளின் தரவுத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட, தி பேங்கரின் சிறந்த 1000 உலக வங்கிகளின் தரவரிசையானது, ஒரு வங்கியின் நிதி வலிமையின் முக்கிய குறிகாட்டியான Tier I மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும் இது செயல்திறன் மற்றும் நிலைபெறுதகு தன்மையை அளவிடுவதற்கான தொழில்துறை தரநிலையாகக் கருதப்படுகிறது.
தி பேங்கர் 120க்கும் மேற்பட்ட செயல்திறன் அளவீடுகளைப் பயன்படுத்தி வங்கிகளை வளர்ச்சி, செயல்பாட்டுத் திறன், இடர் மீதான வருமானம், உறுதித்தன்மை, இலாபத்தன்மை, சொத்து தரம், பணப்புழக்கம் மற்றும் அந்நியச் செலாவணி என எட்டு முக்கிய பகுதிகளில் மதிப்பீடு செய்கிறது. இந்த மதிப்பெண்கள் இறுதி தரவரிசைகளைத் தீர்மானிப்பதுடன் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உலகளவில் சிறப்பாகச் செயல்படும் வங்கிகளை அடையாளம் காண்கின்றன.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.