Aug 24, 2025 - 05:03 PM -
0
அடுத்தடுத்த கட்டமாக இந்த கைதுகள் தங்கள் பக்கமாக வந்து விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்னாயத்தம் செய்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க கைதுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாக சிலர் தமது கைதுகளை தடுத்து கொள்ளலாம் என நினைக்கலாம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் நியமான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றோம். அதாவது சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் செயல்பட்டால் அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சட்டப்படி செயல்படுகின்ற செயல்பாடுகளுக்கு வழி விட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இந்த கைது தொடர்பாக பாராளுமன்றத்திலும் முன்பு சில விவாதங்கள் நடைபெற்றன. அப்போது நான் நினைக்கின்றேன் சாமர சம்பத் தசநாயக்க ஒரு கருத்தினை கூறியிருந்தார் முடிந்தால் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யுங்கள் என்கின்ற கருத்தினை கூறியிருந்தார்.
அதேவேளை அரசு தரப்பு கூறிய விடயம் என்னவென்றால் சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் சட்டத்தின் முன் பெரியவர் சிறியவர் என்கின்ற பேதம் இல்லை அல்லது தரம் கூடியவர் தரம் குறைந்தவர் என்கின்ற வித்தியாசம் இல்லை ஆகவே நாங்கள் குற்றம் இழைத்தவர்களை கைது செய்வோம் என்கின்ற கருத்தினை அப்போது பாராளுமன்றத்தில் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு இருக்கின்றார். தனிப்பட்ட செலவு ஒன்றினை பொதுச் செலவாக காட்டி இருக்கின்றார் அதாவது அவரது மனைவியின் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு பிரித்தானியாவுக்கு சென்ற போது அதற்காக ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கின்றார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆனால் இந்த பணத்திரைப் பொறுத்தளவில் இதற்கு முன்னர் அரச நிதியை சூறையாடியவர்கள் அல்லது கொள்ளையடித்தவர்கள் என்று பார்க்கின்ற போது இந்த நிதி என்பது அதைவிட குறைவாக இருந்தாலும் சட்டப்படியான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என குறிப்பிட்டதன் பிரகாரம் நான் நினைக்கின்றேன் ரணில் விக்கிரமசிங்கவை விட இந்த ஊழல் மோசடி லஞ்சத்தில் மிகவும் சீனியர் ஆனவர்கள் இருக்கின்றார்கள் கடந்த கால ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள்.
ஆகவே மக்கள் நினைக்கின்ற கேள்வி என்ன என்றால் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டை வாங்குரோத்திலிருந்து பாதுகாத்தவர் அதைவிட படுமோசமான செயல்கள் செய்தவர்கள் பலர் இருக்கின்ற போது ரணில் விக்கிரமசிங்க ஏன் கைது செய்திருக்கின்றார்கள் என்ற கேள்வியை கேட்பது எங்களுடைய காதுகளிலும் வந்து விடுகின்றது.
அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது மக்கள் எதிர்பார்க்கின்ற விடயம் என்னவென்றால் கடந்த காலத்தில் ஊழல், மோசடி, லஞ்சம், கடத்தல், காணாமல் ஆக்குதல், படுகொலை செய்தல் இவ்வாறு பல்வேறுபட்ட செயல்களை செய்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவை விட மிக மோசமாக செயல்பட்டவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என மக்கள் கேட்கின்றார்கள்.
நீங்கள் சட்டவாட்சியை சரியாக கொண்டு செல்ல வேண்டும் சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் சட்டத்தின் முன்னிலையில் பெரியவர் சிறியவர் என்கின்ற பேதம் இல்லை என்கின்ற அடிப்படையில் நீங்கள் முதலாவதாக ரணில் விக்ரமசிங்க கைது செய்திருக்கின்றீர்கள். ஆனால் ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தளவில் ஜே.வி.பி இயக்கத்திற்கு தனிப்பட்ட விதத்தில் அவர் மீது சில ஆத்திரங்கள் இருக்கின்றன.
குறிப்பாக சொல்லப்போனால் பட்டலந்த சித்திரவதை முகாம் என்கின்ற விடயம் கூட பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டது ஆனால் பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய விடயம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை எனவே இந்த விடயத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதை அந்த விடயத்தில் பழி தீர்ப்பதாக கூட சில மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்.
எங்களைப் பொறுத்தளவில் இந்த சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமாக கருதப்பட்டால் கடந்த காலத்தில் ட்ரிபோலி பிளாட்டூன் என்று சொல்லப்படுகின்ற ஒன்றினை அமைத்து அதன் மூலமாக கடத்தல், காணாமல் ஆக்குதல், வதைத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் என்று எல்லாம் பல்வேறுபட்ட செயல்பாடுகள் நடைபெற்றது.
அப்படிப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கூட ஜனாதிபதிகள் வரிசையில் இருந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு இவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள் அந்த பிளாட்டூனுக்கு கீழ் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்கள் எங்களை பொறுத்த அளவில் யாராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் அதாவது கடத்தியவர்கள் காணாமல் ஆக்கியவர்கள் படுகொலை செய்தவர்கள் பழி தீர்த்தவர்கள் இவர்கள் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும் அவர்களுக்கு நியாயமான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பது கடந்த காலத்தில் இருந்து வந்திருக்கின்றது குறிப்பாக சொல்லப் போனால் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சி அமைத்ததன் பின்னர் இந்த விசாரணைகளை சரியாக செய்தவர் என கருதப்பட்ட சாணி அபேயசேகர அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ததோடு மாத்திரமில்லாமல் அவரை அவர்கள் சிறையில் கூட அடைத்து இருந்தார்கள் இன்று சாணி அபேயசேகர அவர்கள் இந்த குற்ற விசாரணையில் மிகவும் ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக காணப்படுகின்றார்.
நிஷாந்த டி சில்வா என்கின்ற ஒருவர் அவரும் கடந்த காலத்தில் ராஜபக்சவுக்கு எதிரான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தவர் ஆட்சி மாற்றத்துடன் நினைத்து விட்டார் இருந்தால் நாங்கள் மாட்டிவிடுவோம் என்று அவர் சுவிஸ் நாட்டிற்கு அரசியல் தஞ்சம் கோரி சென்று விட்டார்.
எனவே ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மாறுகின்ற போதும் பின்னணிகள் சில நிகழ்ச்சி நிழல்கள் இருக்கின்றன ஆனால் இப்போது இருக்கின்ற அரசாங்கம் கூறுகின்றது தங்களுக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை சட்டப்படியா ஆட்சி செய்கின்றோம் சட்டத்தின் முன்னிலையில் சமமாக அனைவரையும் கருதுவோம் என்று கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் எதிர்பார்ப்பது தமிழர் பக்கமாக பல்வேறுபட்ட படுகொலைகள் நடைபெற்றது சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை, கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சார்ந்த படுகொலை இருக்கின்றது.
இந்த சத்துருக்கொண்டான் படுகொலை மற்றும் வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை என்பவற்றில் கேப்டன் முனாப் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக இப்போது நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த கேப்டன் முனாப் என்று சொல்லப்படுகின்றவர் உண்மையில் ஒரு முஸ்லிம் அல்ல அவர் உண்மையில் பீரீஸ் மாட்டின் என்கின்ற பெயர் உடைய காலியை சேர்ந்த ஒருவர் கேப்டன் முனாஃபாக இருக்கின்றபோது பலவிதமான படுகொலைகள் நடைபெற்றன அவர் சத்ருக்கொண்டான் படுகொலை மற்றும் வந்தாறுமூலை படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அந்தக் காலத்தில் அந்த இருள் சூழ்ந்த காலத்தில் நடைபெற்ற விசாரணைகள் சரிநிகர் பத்திரிகையில் கூட பல்வேறுபட்ட தகவல்கள் வந்திருந்தன எனவே இப்படிப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டால் சட்டவாட்சியாக தான் இருக்க முடியும் கடந்த காலத்தில் சில தமிழ் குழுக்கள் கூட இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோன்று ஊர்காவல்துறையினர் என்கின்ற அடிப்படையிலும் சில முஸ்லிம் குழுக்கள் செயல்பட்டன அதே போன்று தமிழர் முஸ்லிம்களுக்கு இடையில் இடைவெளிகளை ஏற்படுத்துவதற்காக கேப்டன் முனாப் என்கின்ற அடிப்படையில் ஒருவர் செயல்பட்டார் ஆனால் அவர் உண்மையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல ஒரு சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் அவர் பல்வேறுபட்ட பாரதூரமான செயல்பாடுகளை செய்ததாக அறியப்படுகின்றது.
ஆகவே தயவு செய்து இதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தால் நீங்கள் உண்மையில் சட்டவாட்சியை செய்கின்றீர்கள் என்பதனை நாங்கள் அறிவோம் மாறாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் பாரிய குற்றம் இழைத்தவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தால் இதனை சட்டவாட்சி என்று கூற முடியாது.
உண்மையில் நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் மகிந்தானந்த அழுத்கமகே அவர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அவர் இப்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார். அவர் கூறினார் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்ரமசிங்க சிறையில் போடுவோம் என்று அவர் எதிர்க்கட்சியில் இருக்கின்ற போது கூறினார்கள்.
அன்றைய காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூட கூறியிருந்தார் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டவர்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்கள் அன்று அவர்கள் கூறுகின்றார்கள் மத்திய வங்கி ஊழலாக இருக்கலாம் அல்லது வேறுபட்ட குற்றச்சாட்டு உடையவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையில் தள்ளுவோம் என்று கூறியவர்கள் இப்போது என்ன செய்கின்றார்கள் என்றால் எதிர்க்கட்சியினர் ஒன்று கூடி ஒரு விடயத்தை செய்கின்றார்கள்.
நான் நினைக்கின்றேன் அடுத்தடுத்த கட்டமாக இந்த கைதுகள் தங்கள் பக்கமாக வந்து விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்னாயத்தம் செய்கின்றார்களோ என்று நினைக்கின்றேன் அதற்காக எதிர்க்கட்சியில் இருக்கின்ற அனைவரும் தவறு செய்தவர்கள் என்று நான் கூறவில்லை சில புள்ளிகள் தவறு செய்திருக்கின்றார்கள்.
இந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கைதுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாக சிலர் தமது கைதுகளை தடுத்து கொள்ளலாம் என நினைக்கலாம். ஆகவே நான் நினைக்கின்றேன் எதிர்க்கட்சிகளின் நியமான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றோம் அதாவது சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் செயல்பட்டால் அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சட்டப்படி செயல்படுகின்ற செயல்பாடுகளுக்கு உண்மையில் நாங்கள் வழி விட வேண்டும். அந்த வகையில் இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என்பதற்காக ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை ஒரு அடையாளமாக வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் அல்லது எதிர்ப்புகளை தெரிவிக்கின்ற போது இன்னமும் கைது செய்யப்பட போகின்றவர்களை கைது செய்ய மாட்டார்கள் என்பதற்காக கூட இந்த செயல்பாடுகளில் ஈடுபடலாம். ஆனால் அதற்காக எதிர்க்கட்சியில் இருக்கின்ற எல்லோரும் பிழை செய்தார்கள் என்று நான் கூற மாட்டேன்.
இப்போதும் பேரினவாதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பௌத்த மத அடிப்படைவாதிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் செயல்பட்டது எங்களுக்கு தெரியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கூட அந்த ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு நுட்பமான செயல்பாடு என்றும் இப்போதும் எல்லோரும் நம்புகின்றார்கள் எனவே ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய கவிதை பொருத்தளவில் அதை வைத்துக்கொண்டு பௌத்த மேலாதிக்கத்தை அல்லது பௌத்த அடிப்படை வாதத்தை கிளப்பி விட்டு அதன் மூலமாக ஆட்சியை கைப்பற்றுவதற்காக செயல்பட கூடியவர்கள் இருக்கின்றார்கள்.
இப்போது கூட நாங்கள் பார்க்கின்றோம் ஜனாதிபதிகளது சிறப்புரிமைகளை அகற்றிய பின்னர் பௌத்த குருமார்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஒரு இல்லத்தை கொடுப்பதற்கு முன் வந்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது.
ஆகவே இந்த கைதுகளை பௌத்த மேலாதிக்க அடிப்படையில் சிங்கள மேலாதிக்க அடிப்படையில் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு அவர்கள் விளைவார்கள் என்பது எமக்கு கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட விடயம். அப்படியும் செய்ய முற்படுவார்கள் அதற்குரிய படிப்பினைகளை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கையில் இருக்கின்றது.
ஏனென்றால் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது மீண்டும் குற்ற செயல்கள் அல்லது பழிவாங்கல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது எனவே கால தாமதம் இல்லாமல் செய்ய வேண்டிய விடயங்களை செய்கின்றபோது நீங்கள் கேட்டது போன்று அடிப்படைவாதிகள் பேரணவாதிகள் இதனை இன்னொரு பக்கம் திசை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதற்கு இருப்பார்கள் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
--