Aug 24, 2025 - 05:36 PM -
0
எதிர்க்கட்சிகளின் திடீர் கூட்டணி என்பது ரணில் விக்கிரமசிங்கவை காட்டிக்கொண்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் இந்த குற்றவாளிகளை இந்த குற்றத்தோடு தொடர்பு பட்டவர்களை ஊழல்வாதிகளை மக்கள் இனிமேலும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் திட்டத் தெளிவாக விளங்குகின்றது. மக்களின் ஆதரவோடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று (24) பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று அரசியல் அமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் எனும் தொணிப் பொருளில் முன்னாள் அரசியல்வாதிகள் கட்சி பேதம் இன்றி ஒன்றிணைந்து இன்றைய தினம் ஒரு ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க அவர்களை விமர்சனம் பண்ணியவர்கள் அவருக்கு எதிராக தேர்தல் காலங்களில் மோசமான பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள் இன்று ஒன்று சேர்ந்து அவர் நல்லவர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற போதும் அவருக்கு எதிராக அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்டு வந்தவர் அந்த காலகட்டத்தில் மத்திய வங்கி பிணை மோசடி தொடர்பாக ரணிலுக்கு எதிராக மிக பாரியளவு பிரச்சாரத்தை மேற்கொண்டவர் இன்று அவருக்காக அவரை விடுதலை செய்யக் கோரி இன்று ஒன்று சேர்ந்து இருக்கின்றார்.
அதனைப் போன்று மொட்டு கட்சியின் பிரதான செயலாளர் கூட இன்றைய ஊடக சந்திப்பில் அவரை பார்க்கக் கூடியதாக இருந்தது, அவரும் கூட நாட்டிலே மிகப்பெரிய திருடன் ரணில் என குறிப்பிட்டவர் இன்று ரணிலை விட சிறந்தவர் இந்த நாட்டில் இல்லை என இன்று அவருக்கு ஆதரவு குரல் எழுப்புகிறார்.
அதேபோன்று இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் போன்றவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் மிக அவசியமானது அந்த தேர்தலை நடத்தாமல் ரணில் விக்ரமசிங்க காலம் தாழ்த்துகின்றார் அல்லது காலத்தை வீணடிக்கின்றார் நிதிகளை வழங்காமல் எங்களை ஏமாற்றுகின்றார் என அவருக்கு எதிராக கொதித்தெளுந்தவர்கள் இன்று அவருக்காக குரல் கொடுக்கின்ற ஒரு தலைமைத்துவமாக இன்றைக்கு மாறி இருக்கின்றார்கள்.
இன்று இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பின் போது மிக கூடுதலான தரப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டோடு தொடர்பு பட்டவர்களாகவும் அவர்களுக்கு எதிராக இப்போது குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற நேரத்தில் இவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்க்கட்சியினராக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதில் விசேடமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சேர்க்காது இவர்கள் தனி கூட்டணியாக எதிர்கட்சியாக இன்று களமிறங்கி இருக்கின்றார்கள்.
ஆகவே இந்த கூட்டுக் களவாணிகள் இந்த நாட்டுக்கு சொல்ல வருகின்ற செய்தி என்ன திருடர்களை காப்பாற்ற வேண்டும் சட்ட ஒழுங்கினை சட்ட நீதியினை நிலைநாட்ட கூடாது என்பதுதான் எங்களுக்கு இருக்கின்ற முதலாவது கேள்வியாக இருக்கின்றது.
இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்த போதும் அவர்கள் குறிப்பிட்ட விடயம் ஊழல் மோசடியற்ற ஒரு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற விடயத்தை குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதை இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது சட்ட ஆட்சியை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது நாங்கள் சட்டத்தின்பால் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்றோம் எந்த ஒரு அரசியல் தலையிடும் இல்லாது நீதியாகவும் நேர்மையாகவும் சட்டம் தனது கடமையை செய்து கொண்டு இருக்கின்றது.
ஆகவே இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து அவர்கள் இந்த குற்றங்கள் தங்கள் இழைத்திருக்கின்ற குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
அதற்காகத்தான் இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவை காட்டிக்கொண்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.
ஆனால் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் இந்த குற்றவாளிகளை இந்த குற்றத்தோடு தொடர்பு பட்டவர்களை ஊழல்வாதிகளை மக்கள் இனிமேலும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் திட்டத் தெளிவாக விளங்குகின்றது. மக்களின் ஆதரவோடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதனை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
--