Aug 24, 2025 - 06:15 PM -
0
வடமேற்கு கட்சினா மாநிலத்தில் உள்ள ஒரு கடத்தல் காரர்கள் தங்கியிருந்த கோட்டை பகுதி மீது நைஜீரிய விமானப்படை துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலின் பின்னர் அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 76 பேரை நைஜீரிய விமானப்படை மீட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கங்காரா உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள பவுவா மலையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடமேற்கு நைஜீரியாவின் மலும்ஃபாஷி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற மசூதி தாக்குதலுடன் தொடர்புடைய பாபரோ என்ற குற்றவியல் குழுவின் தலைவரை தேடும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த மீட்புப் பணியின் போது ஒரு குழந்தை இறந்ததாக குறிப்பிடப்படுவதுடன் வேறு எவரேனும் உயிரிழந்தனரா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வௌியிடப்படவில்லை.
வடமேற்கு நைஜீரியாவில் குற்றவியல் வலையமைப்பை அகற்றும் முயற்சிகளில் இந்த விமானத் தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு ஆயுதமேந்திய கும்பல்கள் பல ஆண்டுகளாக கிராமப்புற சமூகங்களை அச்சுறுத்தி வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.