Aug 24, 2025 - 09:59 PM -
0
தென் ஆப்பிரிக்கா அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது.
அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.
இன்று (24) தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ஓட்டங்கள் அடித்து அவுட்டானார்.
250 ஓட்டங்களை பெற்றநிலையில் தான் அவுஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது.
மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு அவுஸ்திரேலியா அணி 431 ஓட்டங்களை குவித்தது.
கிரீன் 118 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவால்ட் ப்ரீவிஸ் 49 ஓட்டங்களை அடித்தார்.
இதன்மூலம் 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.