Aug 26, 2025 - 11:33 AM -
0
ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றி பரவி வருகிறது.
இதில், பிரான்ஸ் நாட்டிலும் காட்டுத்தீ பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொண்டும் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பிரான்சின் வடமேற்கே ரோஸ்போர்டென் நகரத்தில் ஏரி ஒன்று உள்ளது.
இந்நிலையில், மொரேன் 29 ரக உலங்கு வானூர்தி ஒன்று அந்த ஏரியில் நீர் எடுக்க சென்றது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. ஏரியின் மேல் வட்டமடித்து நீருக்குள் விழுந்து விட்டது.
எனினும், இந்த சம்பவத்தில் உலங்கு வானூர்தியில் இருந்த விமானி மற்றும் தீயணைப்பாளர் இருவரும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், குளத்தில் தண்ணீர் எடுத்தபோது, அந்த உலங்கு வானூர்தி திடீரென நீரின் மேற்பரப்பை தொட்டுள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸில் காட்டுத்தீயை அணைக்க கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்த புதிய ரக உலங்கு வானூர்தி பயன்பாட்டில் உள்ளது. இந்த கோடை காலத்தில் மட்டுமே 33 முறை பறந்து சென்று 154 முறை நீரை கொண்டு வந்து தந்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் தீயை அணைக்க பெரிதும் உதவியுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான ஹெக்டர் நிலப்பரப்புக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
ரோஸ்போர்டென் நகர முதல்வர் மிச்செல் லவுஸ்சவுர்ன் வெளியிட்ட செய்தியில், ஏரியில் மாசுபாடு ஏற்படும் சூழலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர் என்றார்.