Aug 26, 2025 - 12:30 PM -
0
கூலி படத்தின் வசூல் படுத்தேவிட்டது என்று பேசப்பட்ட நிலையில் திடீரென்று வேகம் எடுத்து இந்தியாவில் மட்டும் ரூபா 250 கோடியை தாண்டிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக நல்ல வசூல் செய்திருக்கிறது ரஜினிகாந்த் படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் வசூல் மீண்டும் நல்லபடியாக நடப்பது தலைவர் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கூலி வசூல் வேட்டை மொத்தமாக முடிந்துவிட்டது என்று பேசப்பட்ட நிலையில் சனிக்கிழமை யாரும் எதிர்பாராவிதமாக வசூல் அதிகரித்து ரூபா 10.5 கோடி வந்தது. இதையடுத்து ஞாயிறு இந்தியாவில் மட்டும் ரூபா 10.75 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ரூபா 256. 75 கோடி வசூல் செய்துவிட்டது கூலி. ரஜினி படத்தின் வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நல்ல விஷயம் ஆகும்.
கூலி படம் தொடர்ந்து தமிழில் தான் அதிகம் வசூல் செய்து வருகிறது. இந்தி, தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. கூலி படத்துடன் ரித்திக் ரோஷனின் வார் 2 படம் வருகிறதே, இதனால் ரஜினி பட வசூல் பாதிக்கப்படுமே என்று பலரும் பேசினார்கள். ஆனால் வார் 2 படத்தால் கூலிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வார் 2 படம் வசூலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தான் இருந்து வருகிறது.
கூலி ரிலீஸான முதல் நான்கு நாட்கள் இந்தியாவில் வசூலில் மிரள வைத்தது. முதல் நாள் ரூபா 65 கோடியும், இரண்டாவது நாள் ரூபா 54.75 கோடியும், மூன்றாவது நாள் ரூபா 39.5 கோடியும், நான்காவது நாள் ரூபா 35.25 கோடியும் வசூல் செய்தது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரம் முடிவதற்குள் ரூபா 1,000 கோடியை வசூலித்துவிடும் கூலி என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் ஐந்தாவது நாளில் இருந்து வசூலின் வேகம் அப்படியே குறைந்துவிட்டது.
கூலி படம் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துக்கு வெற்றிகரமான படமாக அமைந்துவிட்டது.
இதையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து விண்வெளி நாயகன் கமல் ஹாசனும் நடிக்கிறாராம். மேலும் அந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார் கமல் என்கிறார்கள். ரஜினி, கமலை வைத்து யாராவது மீண்டும் படம் எடுக்க வேண்டும் என்கிற ரசிகர்களின் ஆசை நிறைவேறப் போகிறது.