Aug 27, 2025 - 11:16 AM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகிய நிலையில், இராணுவ சிப்பாய் நால்வரும் நேற்று வரை (26) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு நேற்று (26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூத்த சட்டத்தரணி கெங்காதரன், உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கில் இராணுவ சிப்பாய்களுக்கான பிணைக் கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த இராணுவ சிப்பாய்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சியங்களை அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்கள் செல்ல முடியாது என்றும் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு 30.09.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
--