Aug 27, 2025 - 11:32 AM -
0
இலங்கையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைக்கு ஒரு மைல்கல்லாக அமையும் வகையில் சியெட் OHT லங்கா (தனியார்) லிமிடெட், இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பாரிய முதலீடுகளில் ஒன்றாகும்.
இந்த முதலீடானது, இலங்கையை தளமாகக் கொண்ட மிடிகம ஆலை மற்றும் கொட்டுகொடவில் உள்ள வார்ப்படஉற்பத்தி ஆலை உள்ளிட்ட மிச்செலின் குழுமத்தின் இலகுரக கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வர்த்தகத்தை சியெட் லிமிடெட் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை சியெட்டுக்கு Camso வர்த்தகநாமத்தின் உலகளாவிய உரிமையை வழங்குகிறது, இது மூன்று வருட உரிம காலத்திற்குப் பிறகு பிரிவுகளில் நிரந்தரமாக ஒதுக்கப்படும். கையகப்படுத்தல் இறுதி செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஒப்பந்தமானது, இலங்கையை வாகனங்களுக்கான வீதி அல்லாத டயர்களுக்கான (OHT) உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதுடன் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கான போட்டி மையமாக நாட்டை மாற்றுகிறது.
சியெட்டின் இலங்கைக்கான நீண்டகால உறுதிப்பாட்டின் படி, சியெட் ஓஹெச்டி லங்கா (CEAT OHT Lanka), மிச்செலின் லங்கா மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர்கள் சங்கம் (ICEU) ஆகியவற்றுக்கிடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது சுமார் 1,483 ஊழியர்களுக்கு தொழில் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கடந்த கால சேவை, பணி மூப்பு, சம்பளம் மற்றும் சலுகைகளை முழுமையாக தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் பணிநீக்கங்கள் இல்லாமல் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கிறது, இதன் மூலம் செயல்பாட்டு மாற்றத்தின் போது நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை முதலீட்டு சபை (BOI) தலைவர் திரு. அர்ஜுன ஹேரத், இலங்கையில் சியெட்டின் குறிப்பிடத்தக்க முதலீட்டை நாம் வரவேற்கிறோம், இது சமீபத்திய காலங்களில் இந்தியாவிலிருந்து செய்யப்பட்ட மிகப்பாரிய முதலீடுகளில் ஒன்றாகும். இந்த ஒப்புதல் சியெட்டின் தொலைநோக்கு பார்வையில் எமது நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கையின் நிலையை மேலும் உயர்த்தும்.
சியெட் ஸ்பெஷாலிட்டியின் பிரதம நிர்வாகி அமித் டொலனி கூறுகையில், சியெட் OHT லங்காவிற்கு BOI ஒப்புதல் அளித்திருப்பது இலங்கையுடனான எமது பங்குடைமையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. எமது உலகளாவிய வீதி அல்லாத டயர் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் சியெட்டின் தொலைநோக்குடன், இந்த நாட்டிற்கான சிறந்த திட்டங்களை நாம் கொண்டுள்ளோம். இந்த முதலீடானது இலங்கைக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில் எமது எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
சியெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி குமார் சுப்பையா தெரிவிக்கையில், இலங்கையில் தொழில்களைப் பாதுகாப்பது மற்றும் எமது செயல்பாடுகளை வலுப்படுத்துவது எமது உடனடி முன்னுரிமையாகும். இந்த முதலீடானது, எமது ஊழியர்களுக்கான சியெட்டின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் OHT உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக இலங்கையை உருவாக்குவதை உறுதி செய்கிறது. சியெட்டானது இந்த ஒப்பந்தத்தின் மூலம், உயர் லாபம் கொண்ட OHT மற்றும் டிராக்குகள் பிரிவில் உலகளாவிய பங்களிப்பாளராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் இலங்கையை அதன் சர்வதேச விரிவாக்க யுக்தியின் மையத்தில் இணைத்துள்ளது. இந்த நடவடிக்கை தொழில்துறை வளர்ச்சி, ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் ஊழியர் உத்தரவாதம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது, இது அதிக பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான BOI இன் கொள்கையுடன் இணங்குகிறது.