Aug 27, 2025 - 12:05 PM -
0
‘தேசத்தை வளப்படுத்துவோம்’ என்ற நோக்கத்தில் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தின் ஊடாக முதியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படும் செரண்டிப் மா ஆலை நிறுவனம், தொடர்ச்சியாக நான்காவது வருடமாக ‘உத்தம தலதா’ திட்டத்தை ஏற்பாடு செய்தது. முதியோர் பராமரிப்பு மற்றும் சமூக சேவை நிறுவனத்தின் மாறாத அர்ப்பணிப்பை மீளுறுதிப்படுத்தும் வகையில் இந்த திட்டமானது அர்த்தமுள்ள முயற்சியில் புதுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது.
கடந்த காலங்களில் கண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களை சௌகரியமான பஸ் வண்டிகளில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இம்முறை, கம்பாஹா மாவட்டத்தில் உள்ள ஆறு முதியோர் இல்லங்கள் தெரிவுசெய்யப்பட்டு, முதியோர்களை விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் வண்டியில் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை புகையிரத சேவையுடன் நெருக்கமாக இணைந்து இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கம்பஹா மற்றும் கண்டியில் உள்ள புகையிரத நிலையப் பணியாளர்களின் உற்சாகம் மிகுந்த ஒத்துழைப்பு இத்திட்டத்தின் வெற்றிக்குப் பங்களித்தனர்.
முதியோர்களின் சௌகரியமான பயணம் குறித்து அதிக அக்கறை செலுத்தப்பட்டிருந்ததுடன், முதியோரின் இந்த ரயில் பயணத்தில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் பணிஸ் வழங்கப்பட்டு கம்பஹா ரயில் நிலையத்திலிருந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், பரந்துபட்ட சமூகங்களைச் சென்றடைவது என்ற நிறுவனத்தின் முயற்சியில் ஓர் அங்கமாக இது அமைந்தது.
கண்டியை வந்தடைந்த முதியவர்கள் புனித தலதா மாளிகையை வழிபட்டு, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்கள். தலதா மாளிகையின் விஜயத்தைத் தொடர்ந்து, எசல பெரஹரவின் சிறப்பை தெளிவாகக் கண்டுகளிக்கும் வகையில் சௌகரியமான முறையில் விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர் பகுதியில் இவர்கள் அமரவைக்கப்பட்டனர்.
இத்திட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நாள் முழுவதுமான பராமரிப்பை செரண்டிப் மா ஆலை நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன், இவர்களின் நலனை உறுதிசெய்ய வைத்தியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் எந்நேரமும் தயாராக இருந்தனர். முதியவர்களுக்கான சௌகரியம் மற்றும் அவர்களின் நலன்புரிக்கு முன்னுரிமை அளித்து அனைவருக்கும் உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்த மறக்கமுடியாத நிகழ்வை நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் பங்கெடுத்த அனைத்து முதியவர்களுக்கும் சட்டகமிடப்பட்ட தனிப்பட்ட புகைப்படமொன்று பரிசாக வழங்கப்பட்டது.
செரண்டிப் மா ஆலை நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த ‘உத்தம தலதா’ திட்டமானது அன்பை வெளிப்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறையுடன் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கையாக அமைகின்றது. பெரஹர முடிவடைந்ததும் இவர்கள் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் வண்டியின் மூலம் மீண்டும் கம்பஹாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.
உலக முதியோர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொண்டாடவிருக்கும் நிலையில், வளர்ச்சி என்பது உணவுடன் மாத்திரம் முடிவுறாமல் நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களைக் கொண்டாடுதல் என்பதன் முக்கியத்துவத்தை உள்ளடக்கியுள்ளது என்பதையும், இது ‘தேசத்தை வளப்படுத்துவோம் என்ற நிறுவனத்தின் இலக்குடன் இணைந்தது என்பதையும் செரண்டிப் சுட்டிக்காட்டுகின்றது.