வடக்கு
குற்றங்களை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்!

Aug 27, 2025 - 01:54 PM -

0

குற்றங்களை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்!

சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும், முயற்சியாண்மைக் கற்கைநெறி மாணவர்களும் இணைந்து நடத்திய உலக முயற்சியாளர் தின விழாவும், மாபெரும் வர்த்தக சந்தையும் பல்கலைக்கழகத்தில் நேற்று (26) சிறப்பாக நடைபெற்றது. 

நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், 

உலக முயற்சியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால் ஊழல்வாதிகளை பாதுகாக்க கூடாது. அவர்கள் சுதந்திரமாக சுற்றிதிரிவதற்கு இடமளிக்கவும் கூடாது. எனவே, முயற்சியாளர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான் ஊழல்வாதிகளுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான். டயமன்ட் திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான். 

கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. எனவேதான் தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கள்வர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை காப்பதற்கான கூட்டணியாகும். 

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை. 

சட்டம் தனது கடமையை செய்வதற்குரிய வளங்களை நாம் வழங்கி வருகின்றோம். ஜனநாயகம் பற்றி எதிரணிகள் எமக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை. ஜனநாயகம் என்றால் என்னவென்பதை செயலில் காட்டியவர்கள் தான் நாம். கடந்த இரு தேர்தல்களின்போது ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது முழு உலகமும் அறியும் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05