Aug 28, 2025 - 10:42 AM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பதுக்கி விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், அவருக்கு எதிரான விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், தனிப்பட்ட செல்வாக்கைக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்க முயல வேண்டாம் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது. இது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கம்பீருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்,
அவரது அறக்கட்டளை மற்றும் சிலர் மீது கோவிட் பெருந்தொற்று காலத்தில் 'ஃபேபிஃப்ளூ' (Fabiflu) உள்ளிட்ட மருந்துகளை உரிய உரிமம் இன்றி பதுக்கி வைத்து விநியோகித்ததாக டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கம்பீர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கம்பீர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கம்பீர் தரப்பு வழக்கறிஞர், "கம்பீர் ஒரு முன்னாள் எம்.பி., இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் கோவிட் காலத்தில் மக்களுக்கு உதவியவர்" என்று அவரது நற்பெயர்களை அடுக்கினார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி,
"நீங்கள் ஒரு சாதாரண கோரிக்கையை முன்வைத்திருந்தால், நான் பரிசீலித்திருப்பேன். ஆனால் நீங்கள் பல விஷயங்களைக் கூறி, கட்சிக்காரரின் பெயர், அவரது நற்சான்றிதழ்கள், அவர் செய்த சேவைகள் என அனைத்தையும் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் பெயரைப் பயன்படுத்தி சலுகை பெற முயற்சிப்பது போல் தெரிகிறது. இது நீதிமன்றத்தில் எடுபடாது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி என்ன? 2021 - ஆம் ஆண்டு மே மாதம், கோவிட்-19 இரண்டாம் அலையின்போது,
டெல்லியில் மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. அந்த நேரத்தில், கௌதம் கம்பீர் தனது அறக்கட்டளை மூலம் 2,628 'ஃபேபிஃப்ளூ' மாத்திரை அட்டைகளை வாங்கி, அதில் 2,343 அட்டைகளை நோயாளிகளுக்கு விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
உரிய உரிமம் இல்லாமல் மருந்துகளை வாங்கி விநியோகித்தது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இது நிரூபிக்கப்பட்டால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கம்பீரின் நோக்கம் நல்லதாக இருக்கலாம் என்றாலும், மருந்து தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் அவரது செயல் பொறுப்பானதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில், கம்பீருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்யக் கோரும் பிரதான மனுவை நாளை (29) விசாரிப்பதாக ஒப்புக்கொண்ட நீதிபதி, விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.