Aug 29, 2025 - 10:14 AM -
0
இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரிய தலங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்களை ஆவணப்படுத்துதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, கொழும்பிலுள்ள BMICH Cinema Lounge இல் செப்டெம்பர் 3 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவும் இணைந்து ஒரு கண்காட்சியினையும், ஆய்வரங்கினையும் நடாத்தவுள்ளன. அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விடயமான இறையாண்மை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அமைதியினையும், பாதுகாப்பினையும் பராமரிப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் வகிக்கும் முக்கிய பங்கினை நினைவூட்டுவதாகவும் இக்கண்காட்சி அமைந்துள்ளது.
இக்கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி காலை 11 மணிக்கு பொதுமக்களுக்காகத் திறக்கப்படும். அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
தென்னிலங்கையில் உள்ள கொடவாய எனும் மீன்பிடிக் கிராமத்திற்கு அருகேயுள்ள கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொடவாய புராதன கப்பற் சிதைவானது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அறியப்பட்ட மிகப் பழமையான மரத்தினாலான கப்பற் சிதைவாகும். 2,100 ஆண்டுகளுக்கும் அதிக பழமையான இது, கிமு 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டிற்குரியதாகும். நீருக்கடியில் காணப்படும் இவ்வசாதாரண தொல்பொருள் தலமானது, இந்து சமுத்திரத்தினூடாக ஆரம்பகாலத்தில் இடம்பெற்ற வர்த்தகம் மற்றும் கடல்வழிப் பயணங்கள் குறித்த அரிய பல தகவல்களை வழங்குகிறது.
வரலாற்றுத் தலங்கள் மற்றும் தொல்பொருட்கள் முதல் பாரம்பரிய கலை வடிவங்கள் வரையான கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களுக்கு உலகளாவிய ரீதியில் உதவி செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு முன்முயற்சியான கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் (AFCP) மூலம் இச்செயற்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது. AFCP ஊடாக, கொடவாயாவில் களிமண் மட்பாண்டங்கள், அரைக்கும் கற்கள், கண்ணாடி மற்றும் உலோக பாளங்கள் மற்றும் கார்னிலியன் மணிகள் உட்பட குறிப்பிடத்தக்க பல தொல்பொருட்களை நிபுணர்கள் மீட்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். இது பிராந்திய வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் பண்டைய காலத்தில் இலங்கை கொண்டிருந்த வகிபாகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இக்கப்பல் சிதைவினைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் அதனை ஆய்வு செய்வதற்காகவும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், அக்கப்பல் எங்கிருந்து புறப்பட்டது என்பதைக் கண்டறிவதையும், கடல்சார் வரலாற்றில் அதன் இடத்தை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
கொடவாய தலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தினைப் பாதுகாப்பதன் பரந்த முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலாச்சார நிபுணர்களை இந்த ஆய்வரங்கு ஒன்றிணைக்கும். இலங்கையர்களும் வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோரும் பார்வையிடக் கூடியதாக இருப்பதை உறுதி செய்து, அங்கிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு, காலியிலுள்ள கடல்சார் தொல்பொருள் நூதனசாலையில் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரியங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக ஆராய்ச்சியினை மேம்படுத்துதல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீடித்த பங்காண்மையினை இம்முன்முயற்சி பிரதிபலிக்கிறது.