Aug 29, 2025 - 10:20 AM -
0
இலங்கையிலும், சார்க் பிராந்தியத்திலும் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அங்கீகாரமளிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்து வருகின்ற தனது பிரதான நிகழ்வான “WCIC PRATHIBHABHISHEKA – WOMEN ENTREPRENEUR AWARDS 2025” குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனம் (Women’s Chamber of Industry and Commerce) அறிவித்துள்ளது.
“The Women Entrepreneur Awards 2025” நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. WCIC ன் 40 ஆண்டு காலப் பயணத்தில் இடம்பெறும் 15 வது நிகழ்வாக இது மாறியுள்ளது. மீள ஆரம்பிக்கப்பட்ட கோட்பாட்டின் கீழ் இது 4 வது முறையாக இடம்பெறுகின்றது. 2026 ஜனவரியில் இடம்பெறவுள்ள மிகவும் மதிப்பிற்குரிய WCIC PRATHIBHABHISHEKA - பெண் தொழில்முனைவோர் விருதுகள் 2025 ல் போட்டியிடுவதற்காக தமது நெகிழ்திறன் மற்றும் சாதனைமிக்க வரலாறுகளை பகிர்ந்து கொள்ளுமாறு மிகச் சிறப்பான சாதனைகளைப் புரிந்துள்ள பெண்களுக்கு நாம் மீண்டும் அழைப்பு விடுகிறோம். பெண் தொழிமுனைவோரின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான விடாமுயற்சிக்காகவும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பிற்காகவும் இவ்விருதுகள் நிகழ்வு அவர்களைக் கௌரவிக்கவுள்ளது. இப்போட்டி பிரதானமாக இலங்கையிலுள்ள பெண் தொழில்முனைவோருக்கானது என்றாலும், விசேட பிரிவின் கீழ் போட்டியிடுவதற்கு சார்க் பிராந்தியத்திலுள்ள ஏனைய பெண்களுக்கும் நாம் வாய்ப்பளிக்கின்றோம். வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான தேசிய சம்மேளனம் என்ற வகையில், நிலைபேணத்தக்க, செயற்திறன் மிக்க, மற்றும் நெறிமுறைக்கு அமைவாக எமது முயற்சிகள் அனைத்தையும் நாம் மேற்கொள்வதுடன், அவை முற்றுமுழுதாக கணக்காய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு மதிப்பிற்குரிய Prathibhasheka விருதுகளை வென்றுள்ள பெண்கள் பலரும் இந்த விருதுகள் தனிப்பட்ட ரீதியிலும், வணிக ரீதியிலும் தமக்கு ஏற்படுத்தியுள்ள மதிப்பை அங்கீகரித்துள்ளனர்,” என்று WCIC ன் தலைவர் கயனி டி அல்விஸ் அவர்கள் குறிப்பிட்டார்.
ஏற்பாட்டுச் சபையின் சார்பில் இணைத் தலைவர்களான ஒஷாதி சோமசிங்க மற்றும் துசிதா குமாரகுலசிங்கம் ஆகியோர் இது குறித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், “ஆண்டுதோறும் WCIC Prathibhabhisheka நிகழ்வானது உந்துசக்தி பெற்று வருவதுடன், இந்த அற்புதமான செயற்திட்டத்திற்கு கிடைத்து வருகின்ற ஈர்ப்பு எமக்கு மிகவும் உற்சாகமளிக்கின்றது. நாடெங்கிலுமுள்ள பெண் தொழில்முனைவோரைக் கௌரவிக்கும் இத்தேசிய முயற்சியை முன்னெடுப்பதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதற்கு உத்வேகம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்பயணத்தில் அங்கம் வகிப்பதற்கு பலதரப்பட்ட அளவிலான பெண் தொழில்முனைவோர் மிகவும் ஆவலாக இருப்பர் என்பதை நாம் அறிவோம். தொடக்க தொழில் முயற்சி, நுண் தொழில் முயற்சி, சிறு தொழில் முயற்சி, நடுத்தர தொழில் முயற்சி, மற்றும் பாரிய தொழில் முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவுள்ளோம். மீளாய்விற்குட்படுத்தப்படுகின்ற 2024/2025 ஆண்டில் ஒவ்வொரு பிரிவும் குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு உட்பட்டதாக வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கலம் ஆகிய விருதுகள் வழங்கப்படும்.
தேசிய தொழில்முனைவோர் விருதுகள் மூலமாக நாம் உண்மையான பலனை விளைவிப்பதற்காக, பிராந்திய பெண் தொழில்முனைவோரின் பங்கேற்பை நாம் எதிர்பார்ப்பதுடன், கடந்த காலங்களைப் போலவே அனைத்து 9 மாகாணங்களிலிருந்தும் பெண் தொழில்முனைவோர் இதில் பங்குபற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் மிகச் சிறந்த விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, “மாகாணத்தின் மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோர்” விருதும் வழங்கப்படவுள்ளது.
இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்படுகின்ற பெண் தொழில்முனைவோர் அனைவரும் 2025 க்கான இளம் பெண் தொழில்முனைவோர், மிகச் சிறந்த தொடக்க தொழில் முயற்சி, தைரியமான பெண், மிகச் சிறந்த ஏற்றுமதி சார்ந்த தொழில் முனைவோர் (தயாரிப்பு மற்றும் சேவைகள்), மற்றும் சார்க் பிராந்தியத்தில் மிகச் சிறந்த பெண் தொழில் முனைவோர், டிஜிட்டல் தொழில்முனைவோர், மிகவும் புத்தாக்கமான தொழில்முனைவோர், மற்றும் சமூக தொழில்முனைவோர் ஆகிய மதிப்புமிக்க விசேட விருதுகளுக்காக கருத்தில் கொள்ளப்படுவர். அனைத்திற்கு மகுடம் வைத்தாற்போல், “ஆண்டின் மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோர் - 2025” விருது இவ்வைபவத்தின் சிறப்பம்சமாக அமையும்.
“இந்நிகழ்வுக்கான விண்ணப்பங்களை www.wcicsl.lk மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும், அல்லது WCIC அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும் (இது ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்). விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்து, விண்ணப்பதாரியின் சாதனையை நிரூபிக்கும் சான்றுகளுடன் இணைத்து, WCIC இடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி 2025 ஒக்டோபர் 15 ஆகும்,” என இணைத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
WCIC Prathibhabhisheka - பெண் தொழில்முனைவோர் விருதுகள் 2025 நிகழ்வுக்கு வலுச் சேர்ப்பதற்கு பிளாட்டினம் கூட்டாளராக AIA Insurance, வைர/வங்கிச்சேவை கூட்டாளராக DFCC ஆலோக, தங்கக் கூட்டாளர்களாக McLarens குழுமம் மற்றும் யுனிலீவர் அருணலு, வெள்ளிக் கூட்டாளராக ஹேலீஸ் பிஎல்சி மற்றும் மலிபன், வெண்கல கூட்டாளராக Impra Teas, Macbertan, படைப்பாக்க கூட்டாளராக Triad, மற்றும் அறிவுக் கூட்டாளராக Ernst & Young ஆகியன மீண்டும் கைகோர்த்துள்ளன. அடுத்து வரும் வாரங்களில் இன்னும் பல கூட்டாளர்களின் ஆதரவு எமக்குக் கிடைக்கப்பெறும் என நம்புகின்றோம்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனம் (Women’s Chamber of Industry and Commerce (WCIC) என்பது இலங்கையின் தேசிய சம்மேளனம் என்பதுடன், பெண் தொழில்முனைவோர் மற்றும் தொழில்ரீதியான பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முன்னணி அமைப்பாகும். சமுதாயத்திற்கு தமது பங்களிப்பை வழங்கி, இந்த அமைப்பு தோற்றுவிக்கின்ற பல்வேறு வசதிகளின் பயனை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்ற அனைத்துப் பெண்களும் இதற்கான உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். நெகிழ்திறன் வலுவுடன், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பாற்றியுள்ள மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கு அங்கீகாரமளித்து, வெகுமதியளிக்கும் ஒரு பிரதான நிகழ்வாக WCIC Prathibhabhisheka பெருமையளிக்கின்றது.
கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 076-6848080