Aug 29, 2025 - 10:24 AM -
0
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி தடம்பதித்ததை கொழும்பு பங்குச்சந்தையில் கொண்டாடும் முகமாக விழா மணியை அடிப்பதற்கு வங்கியானது அழைக்கப்பட்டது.
வங்கியினுடைய வரலாற்றில் ஓர் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்த இவ் அங்கீகரிக்கும் நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன், முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் முகாமைத்துவ உறுப்பினர்கள் பங்குபற்றினர். இந் நிகழ்வானது வங்கியின் நிதி மற்றும் செயற்பாட்டுத் தலைமைத்துவத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்தது.
கொமர்ஷல் வங்கியின் சந்தை மூலதனப் பெறுமதியானது கடந்த 19 ஆகஸ்ட் 2025 இல் முடிவடைந்த பங்கு வர்த்தகத்தில் ரூ. 196.75 ஆக உயர்வடைந்ததுடன், அமெரிக்க டொலர் 1 பில்லியன் பெறுமதியைத் தாண்டியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.144.75 ஐ விட அதிகமானதாகும்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன், அமெரிக்க டொலர் 1 பில்லியன் சந்தை மூலதனத்தைக் கடந்துள்ளதானது, கொமர்ஷல் வங்கி பாரிய மூலதனத்தைக் கொண்ட நிறுவனமாக மாற்றமடைந்துள்ளதைக் குறிப்பதோடு, உலகளாவிய மூலதனச் சந்தைகளில் எமது நிலைகளை மேம்படுத்தி, குறியீட்டு நிதிகளில் எங்களைப் பரந்த அளவில் நிலைநிறுத்தியுள்ளது. அதிகரித்த சந்தை அங்கீகாரத்துக்கும் மேலதிகமாக, இப்பாரிய சந்தை மூலதனமானது, மூலதன மற்றும் கடன் சந்தைகளுக்கான அணுகலையும், புதிய வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவதற்கும், புத்தாக்கங்களில் முதலீடுசெய்வதற்கும் மற்றும் எமது பங்குதாரர் பெறுமதிக்கு வலுச்சேர்ப்பதற்கும் எமக்கு உதவுகின்றது. என்று கூறினார்.
கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் திரு. திமுத்து அபேசேகர தெரிவிக்கையில், CSE யில் பட்டியலிடப்பட்ட பில்லியன் டொலர் பெறுமதியைக் கடந்த, இரண்டு நிறுவனங்களின் சிறப்புமிக்க வரிசையில் கொமர்ஷல் வங்கி இணைந்துள்ளதாகவும், இவ்வாறு மதிப்பிடப்பட்ட மூன்றாவது இலங்கை நிறுவனமாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.இது வங்கிக்கும், கொழும்பு பங்குச் சந்தைக்கும், நாட்டிற்கும் ஒரு பெருமையான தருணம் மட்டுமல்லாது நமது பங்குச் சந்தை அடைந்துவரும் முன்னேற்றத்தின் சக்திமிகுந்த சமிக்கையுமாகும். எங்கள் சந்தையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பில்லியன் டொலர் நிறுவனமும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதுடன் முதலீட்டு ஈர்ப்பையும் விரிவுபடுத்தி உலகளாவிய முதலீட்டு வரைபடத்தில் இலங்கையை மேலும் உறுதியாகவும் நிலைநிறுத்துகிறது. இதுபோன்ற சாதனைகள் எமது பயணத்திற்கு நேரடியாகப் பங்களிக்கின்றன.என்று கூறினார்.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கூறுகையில், 'இது வங்கிக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் ஓர் முக்கியமான மைல்கல்லாகும். மேலும், இது எமது வியாபார மாதிரியின் பலத்தையும், எமது முதலீட்டாளர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது. நாம் எப்போதும் சமச்சீரான வளர்ச்சியிலும், சமூக மற்றும் தேசிய பொருளாதாரச் சமநிலையைப் பேணுவதிலும், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்வதோடு பங்குதாரர்களின் பெறுமதியை அதிகரிப்பதிலும் முனைப்பாகச் செயற்படுகின்றோம். இந்த மைல்கல்லானது, நிலைபெறுதகு பெறுமதியை வழங்கும் எமது உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.' என்று அவர் மேலும் கூறினார்.
ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களில், நிறுவனக் குழுமம் மற்றும் வங்கி மட்டத்தில் முறையே ரூ. 255 மில்லியன் (8.88%) மற்றும் ரூ. 242 மில்லியன் (8.66%) வளர்ச்சியடைந்துள்ளதுடன் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ரூ.3 டிரில்லியன் சொத்துக்களைத் தாண்டிய இலங்கையின் முதல் தனியார் துறை வங்கியாக கொமர்ஷல் வங்கி முத்திரை பதித்துள்ளது.
உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகத் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.