Aug 29, 2025 - 03:47 PM -
0
எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்யும் சிந்தனையுடையவர்கள், அதற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
செம்மணி உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி, தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று (29) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்ததாவது:
"ஐ.நா. சபையின் கதவை தட்டியது மக்களின் மற்றும் போராளிகளின் தியாகம் என்பதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இன்று வடக்கு, கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களின் எலும்புக்கூடுகள் வெளிவருகின்றன. பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. முதன்முதலாக மனித எலும்புக்கூடுகள் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித புதைகுழி கண்டறியப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகளவு மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய் ஒருவர் தனது பிள்ளையை கட்டிப்பிடித்த நிலையில் உள்ள எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது மனதில் வேதனை ஏற்படுகிறது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கை ஐ.நா. சபை வரை சென்றதாக கூறியிருந்தார். இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கு பதிவாகியுள்ளது. அவ்வாறான சூழலில், ஆயர் கூறியவாறு, 'கள்ளர்கள் கள்ளர்களை விசாரிக்க முடியாது' என்பது போல, எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்யும் எண்ணத்துடையவர்கள், அதற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த கையெழுத்து இயக்கம் ஐ.நா. வரை சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும். எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். வடக்கில் இன்று (29) இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கில் வேறொரு தினத்தில் இது நடைபெறும். ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை பெறுவதன் மூலம் எமது இலக்கை அடைய முடியும். இதன் மூலம் எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும்."இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
--