Aug 30, 2025 - 11:10 AM -
0
உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகள் சட்டவிரோதமானவை என அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார். இந்த வரி விதிப்பு கடந்த 27ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க ட்ரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
தேசிய அவசர நிலையை அறிவிக்கவோ, அல்லது உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரிகளை விதிக்கவோ டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரிகள் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீ்திமன்றில் மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும், அமெரிக்கா இறுதியில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.