Aug 30, 2025 - 01:17 PM -
0
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது.
முதலாவது தொடரில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் அழும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அந்த தொடரின் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது.
அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் அந்த போட்டியில் ஆட்டமிழந்து வௌியேறும் போது, ஸ்ரீசாந்த் மகிழ்ச்சியை அதிகமாக வௌிப்படுத்தியது ஹர்பஜன்சிங்கிற்கு எரிச்சல் ஊட்டியதற்காகவே அடித்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையான காரணம் எதுவும் வௌியிடப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வௌியாகி வைரலாகி வருகிறது.
ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அடிப்பது வீடியோவில் உள்ளது.