Aug 31, 2025 - 05:24 PM -
0
நடிகர் ரஞ்சித்தின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் ரஞ்சித் பேசியது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்,
சமீபத்துல மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல்ஹாசனையா?.
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று கூறுகிறார். ஆனால் இதே விஜய், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது விஜய், பிரதமரை சந்தித்தது எதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சனை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.
இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற விஜய்க்கு பழையது எல்லாம் மறந்துட்டாரு. தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாறி மறந்துட்டாருனு நினைக்கிறேன்.
மிஸ்டர், மிஸ்டர்னு சொடக்கு போட்டு சொல்லும்போதெல்லாம், ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடி தான். அவர்தான் என்ன காப்பாத்துறாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை.
முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்கும் இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்துக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம் என்று பேசியிருந்தார்.