Sep 1, 2025 - 10:18 AM -
0
ஐபிஎல் தொடரின் போது மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்ததாக ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக எந்த வகையான கிரிக்கெட் போட்டியில் ஆடவில்லை என்று கூறிய அவர், துலீப் டிராபி ஆடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவியை ராஜினாமா செய்து வெளியேறி இருக்கிறார். அடுத்ததாக ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதற்கு ராஜஸ்தான் அணியின் நிர்வாகமே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் தனது சகோதரரின் மகனான ரியான் பராக்கை தலைவராக முடிவு எடுத்து காய்களை நகர்த்தி வருகிறார். அதன் காரணமாகவே ராகுல் டிராவிட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துலீப் டிராபியில் கிழக்கு மண்டல அணியின் தலைவராக விளையாடி வரும் ரியான் பராக் அளித்துள்ள பேட்டி பேசுபொருளாகி இருக்கிறது.
அதில் ரியான் பராக் தெரிவிக்கையில்,
இந்தப் போட்டி ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முக்கிய இலக்காக எதையும் நிர்ணயிக்கவில்லை. எனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றே நினைத்தேன். ஏனென்றால் நீண்ட காலமாக சவாலான கிரிக்கெட்டை விளையாடவில்லை.
ஐபிஎல் தொடருக்கு பின், எந்த வகையான கிரிக்கெட்டையும் காயம் காரணமாக ஆடவில்லை. ஐபிஎல் தொடரின் போதே அதிகமான அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனாலும் துலீப் டிராபியில் விளையாடியது நன்றாக உள்ளது. அதிகளவிலான ஓவர்களை வீசி இருந்தாலும், நீண்ட இடைவெளிக்கு பின் கைகளை சுற்றி பவுலிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் துடுப்பாட்டத்திலும் நன்றாக ஆடினேன் என்று நினைக்கிறேன். பெரிய ஸ்கோராக மாற்றி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் தலைவராக சஞ்சு சாம்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரியான் பராக் தலைவராக செயல்பட்டார். ராஜஸ்தான் அணியை வழிநடத்தியது அழுத்தம் நிறைந்த ஒன்று என்று ரியான் பராக் பேசி இருப்பது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.