Sep 3, 2025 - 10:41 AM -
0
புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 'பிரதீபா' அகில இலங்கை சித்திரப் போட்டியானது கடந்த 24 ஆம் திகதி கொழும்பு கடவத்த ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மட் / பட் / துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் ஓவிய ஆசிரியரும், கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் ஓவிய வளவாளருமான கலைஞர்.ஏ.ஓ. அனல் தேசிய மட்டத்தில் 'திறமைச் சான்றிதழுக்கு' தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் சென்ற வருடம் (2024) அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருந்தமை சிறப்புக்குரியது.
கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி. சர்மிளா சபேசனின் வழிகாட்டலின் கீழ் வருடந்தோறும் மாணவர்கள் மற்றும் வளவாளர்கள் சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.