Sep 4, 2025 - 04:18 PM -
0
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட சீ.சி.டி.வி காணொளிகளை பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டு மீண்டும் இவ்வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் பழனி சக்திவேல், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மாநகர சபையின் பிரதி நகர முதல்வர் சிவன்ஜோதி யோகராஜா, மற்றும் உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் உள்ளடங்களாக 10 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் சார்பாக சட்டத்தரணி பெருமாள் ராஜதுரையும், களனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் சார்பாக சட்டத்தரணிகளான பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகிய இருவரும் முன்னிலையாகினர்.
வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், நாங்கள் இங்கே ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக இங்கு வரவில்லை அதாவது களனிவெளி பெருந்தோட்ட நிறுவனமானது நம் தோட்ட தொழிலாளர்களை இழிவு படுத்துவது காரணமாக நாங்கள் அதை தட்டி கேட்டோம்.
ஆனால் அவர்கள் அதற்கு எதிராக வாதங்களை மாத்திரம் முன்வைத்து வழக்கு தாக்கல் செய்தனர். இதை நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.
ஆனால் அரசு, தொழிலாளர் சம்பள பிரச்சனை சம்பந்தமாக சம்பளத்தை அதிகரித்து தருவதாக கூறினார்கள். இது தொடர்பாக நீங்கள் தான் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
--