Sep 5, 2025 - 09:45 PM -
0
நேற்று (04) இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், இவ்விபத்து குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.
விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 15 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த துயர சம்பவம், குறிப்பாக தனது சொந்த ஊரான தங்காலை மக்களுக்கு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் முழு அறிக்கை பின்வருமாறு:
"2025 செப்டம்பர் 4 இரவு எல்ல-வெல்லவாய வீதியில் நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தங்காலையில் இருந்து சுற்றுலாவுக்குச் சென்று திரும்பியவர்களில், தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்ட பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து முழு நாட்டு மக்களையும், குறிப்பாக தங்காலை பகுதி மக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் உயிர்களைக் காப்பாற்ற ஆபத்தான பாறைகளில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எல்ல பிரதேசவாசிகள், பொலிஸ், இராணுவம், விமானப்படை, தீயணைப்பு படை, மற்றும் வைத்திய குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ மற்றும் மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். தங்காலை நகர சபை ஊழியர்களின் குடும்பங்கள் உட்பட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் மற்றும் மீட்புப் பணிகளின்போது பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்."