Sep 6, 2025 - 08:15 AM -
0
சமூக வலுப்படுத்தலையும் பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாக பகிரப்படுவதை உறுதி செய்வதற்காகவும், தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "பிரஜாசக்தி" தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய முதன்மையான அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
"பிரஜாசக்தி" வேலைத் திட்டம் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், "பிரஜாசக்தி" வேலைத் திட்டத்தை, நாட்டின் வறுமையை ஒழிக்கும் மற்றுமொரு திட்டமாக மாற்றாமல், வளமான நாட்டை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துடன் முழு அரசாங்க பொறிமுறையையும் ஒருங்கிணைத்து முன்னோக்கி செயல்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, எதிர்வரும் ஆண்டுகளில் அரசாங்கத்தின் அனைத்து மாவட்ட அளவிலான அபிவிருத்தித் திட்டங்களும் கிராமிய மட்டத்தில் சமூக அபிவிருத்தி சபைகளால் அடையாளம் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்களாக இருக்க வேண்டும் என்றும், எனவே, மாவட்ட அளவிலான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும்போது ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் பொருந்தக்கூடிய திட்டங்களை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, வேலைத் திட்டத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அந்த முன்னுரிமைகளுக்கு ஏற்ப அந்தந்த அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஆகியவை அதன் நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்க வேண்டும் என்றும் பிரஜாசக்தி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
அதன் மூலம், அபிவிருத்திக்காக செலவிடப்படும் நிதி ஒதுக்கீடுகள் பல சிதறிய நோக்கங்களுக்காக செலவிடப்படுவதற்குப் பதிலாக, மைய நோக்கத்திற்காக செலவிடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
கிராமப்புற அபிவிருத்திக்கு பங்களிக்க விரும்பும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த கட்டமைப்பில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பிரஜாசக்தி வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதில் மாவட்டச் செயலாளர்களுக்கு பெரும் பங்கு இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், பிரஜாசக்தி திட்டத்தை விரிவான தேசிய வேலைத்திட்டமாக அமுல்படுத்துவது தொடர்பான புதிய ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
“Clean Sri Lanka” வேலைத் திட்டத்தை செயற்படுத்தல் குறித்த பரிந்துரைகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட வேலைத்திட்டம், மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டம், பெருந்தோட்டப் பிரதேசங்களில் அனர்த்த வீடமைப்புத் திட்டங்கள், இனங்காணப்பட்ட பாடசாலைகள், விளையாட்டுப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்தல், யானை - மனித மோதலை முகாமைத்துவம் செய்வதற்கு மாவட்ட மட்டத்திலான குழுக்களை அமைத்தல் மற்றும் விசேட தேவைகள்/மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட வேலைத் திட்டங்கள் உட்பட, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இந்நாட்டில் மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வறுமையைக் குறைப்பதற்கான இலக்கு மயப்பட்ட வேலைத் திட்டம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் போது, துறைசார் அமைச்சுகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.