Sep 6, 2025 - 10:16 AM -
0
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
தங்காலை பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணமாக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, நேற்று முன்தினம் (04) எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.