Sep 6, 2025 - 02:05 PM -
0
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை, பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,
அங்குனுகொலபெலஸ்ஸ, தலாவைச் சேர்ந்த சம்பத் மனம்பேரி என்ற எமது கட்சி உறுப்பினர் மீது போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை தம்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் மீது எங்கள் கட்சி ஒருபோதும் தளர்வான கொள்கையைப் பின்பற்றுவதில்லை, அதன்படி, அவரது கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு, மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மிக விரைவில் முடிவுக்கு வந்து உண்மை பொதுமக்களுக்கு வெளிப்படும் என்று ஒரு கட்சியாக நாங்கள் நம்புகிறோம்.
மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இந்த இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவினால் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் சம்பந்தப்பட்ட இரசாயனங்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.