Sep 7, 2025 - 09:42 AM -
0
தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது.
எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை.
இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம்
கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது.
எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
--