செய்திகள்
வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை

Sep 10, 2025 - 10:40 AM -

0

வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை

வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை. 

அமைச்சர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படவில்லை. 

PTAக்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது. 

PTA சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை (moratorium) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act) சட்ட நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு (Sri Lanka Accountability Project) எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் , எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. 

இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. 

இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை. இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது. 

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது. 

மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது. இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது. 

எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்தினை அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05