Sep 10, 2025 - 05:09 PM -
0
நள்ளிரவில் வழிதவறிச் சென்ற இளைஞனை திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் தாக்கி அதனை வீடியோவாக வெளியிட்டமையால் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது புஸ்ஸல்லாவ ரொச்சைட் தோட்டம் வை.ஆர்.சீ பிரிவைச் சேர்ந்த இராமச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி) என்ற 34 வயது இளைஞனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துகொன்டவராவர்.
கொழும்பில் வேலை செய்து வந்த குறித்த இளைஞன் சம்பவதினமான 6 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து வெலிமட செல்லும் தனியார் பஸ்ஸில் வந்துள்ளதுடன் நித்திரை கொண்டமையால் புஸ்ஸல்லாவையில் இறங்க முடியாமல் போயுள்ளது.
பின்னர் இறம்பொடை பிரதேசத்தில் வைத்து விழித்துகொண்டு இறங்கியுள்ளார், இரவு 2 மணி என்பதால் புஸ்ஸல்லாவைக்கு போக பஸ் இல்லாமையால் இறம்பொட பிரதேசத்தில் தனது உறவினரின் வீட்டிற்கு சென்ற போது வழிதவறி பிரிதொரு வீட்டின் கதவினை தட்டியதாக தெரியவருகிறது.
இதன்போது அவ்வீட்டில் உள்ளவர்கள் திருடன் வந்துவிட்டதாக சத்தமிடவே பிரதேசவாசிகள் இணைந்து தாக்கி வீடியோ பதிவு செய்துவிட்டு கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நபர் நிரபராதி என தெரியவரவே விடுவித்துள்ளனர். எனினும் தன்னை தாக்கி அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமையால் பெரிதும் மன உளைச்சலுடன் காணப்பட்ட குறித்த இளைஞன் அவமானத்தை தாங்கிகொள்ள முடியாமல் உயிரை மாய்த்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு கடந்த 08 ஆம் திகதி பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
--

