ஏனையவை
பெருந்தோட்ட நிறுவனங்கள் 1 மாத கால அவகாசம் கேட்டுள்ளார்கள்!

Sep 10, 2025 - 07:16 PM -

0

பெருந்தோட்ட நிறுவனங்கள் 1 மாத கால அவகாசம் கேட்டுள்ளார்கள்!

 

தேசிய மக்கள் சக்தி தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயமாக 1,700 சம்பளம் வழங்குவோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சனை குறித்து நேற்று (09) முக்கிய பேச்சுவார்த்தை பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்றிருந்தது. 

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அதனை மிகத் துரிதமாக வழங்க வேண்டும் என்றும் பெருமுனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. 

குறித்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான சம்பளம் நாளொன்றுக்கு 1,700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பெருந்தோட்டத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. 

மக்களின் பொருளாதார சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாக தோட்டத் தொழிலாளர்களது நியாயமான சம்பள அதிகரிப்பொன்றை வழங்க வேண்டிய கட்டாயத்தை மக்கள் பிரதிநிதியாகிய நாங்கள் வலியுறுத்தினோம். 

இதேவேளை கம்பனிகளின் பிரதிநிதிகள், உற்பத்தி செலவு அதிகரிப்பு, ஏற்றுமதி வருமானங்கள் குறைவு மற்றும் கம்பனிகள் இலாபம் ஈட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என பல்வேறு விடயங்களை மேலும் சுட்டிக்காட்டினர். 

இன்னும் ஒரு மாத கால அளவில் மற்றொரு பேச்சு வார்த்தைக்கு வருகை தந்து அவர்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக கூறுவதோடு அப்போது எமது சாதகமான முடிவினை நாங்கள் அறிவிப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05