விளையாட்டு
கால்பந்து வரலாற்றில் பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்த பொலிவியா

Sep 11, 2025 - 04:37 PM -

0

கால்பந்து வரலாற்றில் பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்த பொலிவியா

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 

48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. 

இதில் தென் அமெரிக்க மண்டல அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். 

ஏற்கனவே அர்ஜென்டினா, ஈகுவடார் ஆகிய அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. 

இந்த நிலையில் இதன் கடைசிகட்ட லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அணியான பிரேசில், 78-வது இடத்தில் உள்ள பொலிவியாவை சந்தித்தது. 

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் கண்ட பொலிவியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஏற்கனவே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்ட பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. 

பொலிவியா அணிக்கு 45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மிகுவல் டெர்செரோஸ் கோலாக மாற்றினார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது. பிரேசில் அணியினர் தீவிரமாக முயற்சித்தும் கடைசி வரை பொலிவியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. 

பொலிவியா அணியின் வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05