ஏனையவை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை எடுத்துக்காட்டும் Pacific!

Sep 13, 2025 - 09:29 AM -

0

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை எடுத்துக்காட்டும் Pacific!

நேற்று (12) கட்டுநாயக்கவில் இடம்பெற்ற ஒரு நிறைவு வைபவத்தில், Pacific Angel 2025 பயிற்சி நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்​​ததை இலங்கை விமானப் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது. இவ்வருடம் இலங்கையில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு பயிற்சியினைக் கொண்டாடுவதற்காக அதில் பங்குபற்றியோருடன், அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வு பெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொன்த மற்றும் இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் இணைந்து கொண்டனர். 

செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெற்ற Pacific Angel 2025 பயிற்சியானது, பேரிடர்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்காக பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. 

குழுக்கள் தமக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயற்படும் தன்மையினை மேம்படுத்துவதற்காகவும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் பிராந்தியத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை இப்பயிற்சி ஒன்றிணைத்தது. இப்பயிற்சியினை நடத்துவதில் இலங்கையின் கடற்படையும் இராணுவமும் முக்கிய பங்காற்றியதுடன் அதில் பங்குபற்றிய ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படை, ஜப்பான் விமான தற்காப்புப் படை, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பங்களாதேஷ் விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க பசிபிக் படைகள் பயிற்சியிலீடுபட்டன. பிராந்தியத்தில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையினை முன்னேற்றுவதில் இலங்கையின் வளர்ந்து வரும் பங்கை அது வழங்கிய தலைமைத்துவம் அடிக்கோடிட்டுக் காட்டியது. விமானப் பராமரிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், காடுகளில் தப்பிப்பிழைத்தல், வான் வழியாக (வான் போக்குவரத்து மூலமாக) நோயாளிகளை எடுத்துச் செல்லல், பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்ட விபத்துகளின் போதான பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் வான்வழி மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய எட்டு விடயதான நிபுணத்துவ பரிமாற்றங்களை இப்பயிற்சி கொண்டிருந்தது. 

கட்டுநாயக்க விமானப்படைத்தளம், சீனக்குடா, மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பயிற்சி செய்தமையானது, பிராந்திய தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நேரடித் திறன்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. 

இப்பயிற்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக்காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், 

Pacific Angel 25 இவ்வருடம் இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு பயிற்சியாகும். எமது இந்தோ-பசிபிக் பங்காளர்களுடன் தோளோடு தோள் நிற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பேரிடர்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரை, நிஜ உலக சவால்களை எதிர்கொள்வதற்காக எவ்வாறு நாம் ஒன்றிணைந்து தயாராகிறோம் என்பதையும், பிராந்தியம் முழுவதும் அமைதியினையும், ஸ்திரத்தன்மையினையும், மற்றும் செழிப்பினையும் பாதுகாப்பதற்கான எமது ஒன்றிணைந்த கூட்டுத் திறனை ஒத்துழைப்பு எவ்வாறு பலப்படுத்துகிறது என்பதையும் இப்பயிற்சி நிரூபிக்கிறது. இன்று எதை நாம் ஒன்றாகக் கட்டியெழுப்புகிறோமோ, அதுவே நாளைய எமது பகிரப்பட்ட பாதுகாப்பிற்கான அடித்தளமாகும்.” எனக் குறிப்பிட்டார். 

"இந்த பயிற்சி நடவடிக்கையானது, இந்தோ-பசிபிக் பங்காண்மையாளர்களின் மத்தியில் பரஸ்பர செயல்திறன் மற்றும் அறிவுப் பகிர்வை வலுப்படுத்தும் அதேநேரம், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மற்றும் ஒத்துழைப்பு உறவையும் பிரதிபலிக்கிறது. இத்தகைய செயற்பாடுகளானது மீளெழுச்சி திறனை உருவாக்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்புச் செய்வதற்கும் முக்கியமான தளமொன்றை அமைத்து தருகின்றன" என்று குறிப்பிட்டு Pacific Angel பயிற்சி நடவடிக்கையில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொன்த தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 

“பிராந்திய விமானப்படைகளிடையே ஒத்துழைப்பையும் அறிவுப் பகிர்வையும் ஊக்குவிக்கும் அதேவேளை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் வான்வழி நடவடிக்கைகளையும் பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளத்தினை வழங்கிய Pacific Angel 2025 கூட்டுப் பயிற்சினை இணைந்து நடத்துவதில் இலங்கை விமானப் படை பெருமையடைகிறது. மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதில் இந்தோ - பசிபிக் பங்காளர்களிடையே ஒத்துழைப்பையும் இப்பயிற்சி ஆழப்படுத்துகிறது.” என இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க தெரிவித்தார். 

கூட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால், மனித பரிமாணத்தையும் Pacific Angel பயிற்சி எடுத்துக்காட்டியது. இசை மூலம் தோழமையுணர்ச்சியினை வளர்க்கும் வகையில் அமெரிக்க விமானப்படை இசைக்குழு பசிபிக் குழாமான 'Final Approach' இலங்கை விமானப்படை இசைக்குழுவுடன் இணைந்து இசை நிகழ்ச்சியினையும் நடத்தியது. அதேநேரம், அமெரிக்க விமானப்படையும் இலங்கை விமானப்படையும், இலங்கையின் பாதுகாப்பமைச்சுடனும் சுகாதார அமைச்சுடனும் இணைந்து, உள்ளூர் சமூகங்களுக்கு நீடித்த நன்மைகளை வழங்கும் வகையில் அகரகம பிரதேச மருத்துவமனையில் ஒரு புதுப்பிக்கும் பணியினையும் பூர்த்திவு செய்தன. 

இவ்வாண்டின் மிகப்பெரிய பல்தரப்பு கூட்டுப்பயிற்சியின் புரவலர் நாடான இலங்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தயாராதல், பேரிடர்களின்போதான பதிலளிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல் மற்றும் நீடித்த பிராந்திய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் இந்தோ - பசிபிக் பங்காளர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்றுகின்றனர் என்பதை Pacific Angel 2025 எடுத்துக்காட்டியது.

Comments
0

MOST READ
01
02
03
04
05