Sep 13, 2025 - 05:16 PM -
0
ஆசிய கிண்ணத்தில் நாளை (14) இடம்பெறவுள்ள பரபரப்பான போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என இந்தியா குற்றஞ் சுமத்திய நிலையில், பாகிஸ்தான் மீது நேரடி தாக்குதல்களும் இந்தியாவினால் நடத்தப்பட்டிருந்தன.
இதனால் பிராந்திய மட்டத்தில் பாரிய அமைதின்மை ஏற்பட்ட நிலையில், பின்னர் இரண்டு நாடுகளும் தாக்குதல்களை இடை நிறுத்தியிருந்தன.
குறித்த சம்பவம் இடம்பெற்று 5 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் மீண்டும் அரசியல் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (UBT) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP)ஆகியன இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் துயரத்தில் இருந்து இதுவரை மீளாத நிலையில் இந்தப் போட்டியை இந்தியா புறக்கணித்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
அத்துடன் இது முழுமையான பணம் ஈட்டும் நோக்கிலேயே நடத்தப்படுவதாகவும், அதனை இந்தியாவில் நேரலை செய்யும் உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் உடை அணிந்திருக்கும் உருவ பொம்மை ஒன்று எரிக்கப்படும் காட்சி வௌியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாளை போட்டி இடம்பெறும் பகுதிகளில் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

