Sep 15, 2025 - 03:39 PM -
0
அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மகளை தந்தையான ஆனந்த சுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக்கியது. இந்த சந்திப்பானது நிரந்தரமாக இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென இந்த நாட்டின் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம்.
தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது வழமை. ஆனால் இந்த ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. தமது விடுதலை இடம்பெறும் என கைதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மீதமாக உள்ள பத்து அரசியல் கைதிகளும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வினயமாக ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.
--