Sep 15, 2025 - 05:26 PM -
0
இலங்கையின் பாதுகாப்பமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், புனரமைக்கப்பட்ட அக்கரகம பிரதேச வைத்தியசாலையில் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற ரிப்பன் வெட்டும் விழாவினைக் கொண்டாடுவதற்காக இலங்கை விமானப்படை (SLAF), அமெரிக்க விமானப்படை (USAF), அக்கரகம மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இணைந்து கொண்டது.
அக்கரகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 40.5 மில்லியன் ரூபா (அண்ணளவாக 135,000 அமெரிக்க டொலர்) பெறுமதியான புனரமைப்புப் பணியானது, இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகளைச் சேர்ந்த பொறியியலாளர்களால் ஒன்றிணைந்து திட்டமிடப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டது.
அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பானது, அமெரிக்க - இலங்கை இராணுவ ஈடுபாட்டின் மையத்தில் காணப்படும் பரிபூரண நம்பிக்கையினை பிரதிபலிப்பதுடன் இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் காணப்படும் பிணைப்புகளையும் பலப்படுத்துகிறது.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்களில் கட்டமைப்பு சார்ந்த மேம்படுத்தல்கள், கூரை, மின்சார மற்றும் நீர்க்குழாய் அமைப்புகள், HVAC உபகரணங்கள், மின் உற்பத்தி, உட்புற சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் ஆகியவை அடங்கும்.
உள்ளூர் சமூகங்களுக்கு உதவி செய்வதில் எமக்கிடையே காணப்படும் ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில், இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்ட கூட்டு பங்களிப்புகளின் மூலம் இச்செயற் திட்டம் சாத்தியமானது.
வருடந்தோறும் 45,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு (இதில் பெரும்பான்மையானவர்கள் பின்தங்கிய சமூக - பொருளாதார பின்னணியைச் சேர்ந்த நோயாளிகள்) சேவையினை வழங்கும் ஒரு மிகமுக்கிய வளமான அக்கரகம வைத்தியசாலையானது, தனது ஒன்பது விசேட சிகிச்சைப் பிரிவுகளினூடாக மருத்துவப் பராமரிப்பினை வழங்கும் வகையில் சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.
“அக்கரகம வைத்தியசாலையின் புனரமைப்புப் பணியானது, சமூகங்களுக்கு அர்த்தமுள்ள பலன்களை வழங்குவதற்காக அமெரிக்காவும் இலங்கையும் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்ற முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. நிபுணத்துவத்தையும் வளங்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், எமது நாடுகளுக்கிடையே நம்பிக்கையை பலப்படுத்தும் அதே வேளை, இன்றியமையாத உட்கட்டமைப்பினையும் நாம் மேம்படுத்தியுள்ளோம். இன்று எதை நாம் ஒன்றாகக் கட்டியெழுப்புகிறோமோ, அதுவே நாளைய எமது பகிரப்பட்ட பாதுகாப்பிற்கான அடித்தளத்தினை அமைக்கிறது. எமது பங்காளர்கள் பாதுகாப்பாக இருக்கும்போது, அமெரிக்காவும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.” என புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.