Sep 16, 2025 - 01:35 PM -
0
இந்தியாவுக்கு எதிரான ஒ கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இந்த சம்பவத்தில், போட்டி நடுவர் ஆண்டி பை கிராஃப்ட் (Andy Pycroft) மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அவரை பதவியில் இருந்து நீக்காவிட்டால், ஆசிய கிண்ண ஐக்கிய அரபு அமீகரகத்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணி எச்சரித்துள்ளது.
இந்திய அணியின் அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணியின் அணி தலைவர் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (PCB) கோபமடையச் செய்துள்ளது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.
இது தொடர்பாக முதலில் இந்திய அணிக்கு எதிராக புகார் அளித்த பாகிஸ்தான், தற்போது போட்டி நடுவர் தங்கள் புகாரை கண்டுகொள்ளவில்லை என்று கூறி அவரை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் நடைபெற உள்ள போட்டியில் இருந்து பை கிராஃப்ட் நீக்கப்படாவிட்டால், அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த போட்டிக்கும் அவரே நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இப்போட்டியை நடத்தவில்லை என்றாலும், பை கிராஃப்ட்க்கு எதிராக புகார் ஒன்றை அளித்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
"போட்டி நடுவர் ஐ.சி.சி-யின் நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் ஆன்மா குறித்த எம்.சி.சி சட்டங்களை மீறியுள்ளார். உடனடியாக ஆசிய கிண்ணத்தில் இருந்து அவரை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி-யிடம் புகார் அளித்துள்ளது," என்று மொஹ்சின் நக்வி 'X' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, போட்டி முடிந்த பிறகு 'கைகுலுக்க வேண்டாம்' என்ற விதிமுறை குறித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரிவிக்க நடுவர் மறந்துவிட்டார் என்றும், இந்த தவறுக்கு பாகிஸ்தான் அணியிடம் அவர் மன்னிப்பு கோரினார் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஐ.சி.சி இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு பொதுவான அறிக்கையையும் வெளியிடவில்லை.