Sep 16, 2025 - 02:21 PM -
0
இன்ஸ்டா மூலம் பழகிய நபரை வீட்டுக்கு வரவழைத்து அவருடைய மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின்களை அடித்து கொடூரம் நிகழ்த்தியதாக இளம்பெண் மற்றும் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சரல்குன்னு பகுதியில் வசித்து வருபவர் ரஷ்மி (23). இவருடைய கணவர் ஜெயேஷ் (29) சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த ரஷ்மிக்கு ஆலப்புழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுடைய பழக்கம் முறையற்ற தொடர்பாக மாறிய நிலையில் அந்த வாலிபரை ரஷ்மி தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
ரஷ்மியின் அழைப்பை தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி அவருடைய வீட்டிற்கு அந்த இளைஞர் வந்துள்ளார். அப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது திடீரென அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ் கைப்பேசியில் இருவரும் உல்லாசமாக இருப்பதை படம் பிடித்துள்ளார். அதன் பின்னரே ரஷ்மியின் உண்மை முகம் அந்த இளைஞருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்மியும் அவருடைய கணவர் ஜெயேஷும் சேர்ந்து அந்த இளைஞரை கொடூரமாக தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த கைப்பேசி மற்றும் 6,000 ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.
பின்னர் அந்த இளைஞரின் இரு கைகளையும் கட்டி தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அவருடைய மர்ம உறுப்பில் 26 ஸ்டேப்ளர் பின்களை அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். இளைஞரின் கை விரல் நகங்களையும் பிடுங்கி வீசி உள்ளனர். இறுதியாக இளைஞரை இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து ஆரன்முளா பொலிஸார் சிகிச்சைபெற்று வரும் அந்த இளைஞரிடம் நடந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனக்கு நடந்த கொடூரங்களை அந்த இளைஞர் தெரிவித்த நிலையில் இதற்கு காரணமான ரஷ்மி மற்றும் அவருடைய கணவர் ஜெயேஷை பொலிஸார் கைது செய்தனர்.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்மி சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இளைஞர்களிடம் பழகி ஆசை வார்த்தை கூறி வரவழைத்து பணம் பறிப்பது வாடிக்கையாக இருந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி ஓணம் திருவிழாவின் போதும் ரான்னி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை இதேபோல சமூக வலைத்தளம் பக்கம் மூலம் பேசி பழகி வரவழைத்து பணம் பறித்ததோடு அவரையும் இதேபோல கொடூரமாக சித்திரவதை செய்து பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.