Sep 16, 2025 - 03:59 PM -
0
இந்தியாவின் தூத்துக்குடியில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்த பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாய் பிரிந்து செல்ல தந்தையின் கள்ளக்காதலே காரணம் என ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரியின் 16 வயது மகன், நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி மகேஸ்வரி (38). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
அப்போது இவரது உறவினரான தூத்துக்குடி சிப்காட் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் ஏட்டு குடும்பத்திற்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளர். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.
இதனால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். மகள் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகன் தந்தையுடன் வசித்துள்ளனர். பொலிஸ் ஏட்டு தனது மகள், மகனை சரிவர கவனிக்காமல் அடிக்கடி சக்தி மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். தாய் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரிதான் காரணம் என்று பொலிஸ் ஏட்டுவின் மகன் கருதினான். இதனால் அவரை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று (15) மாலை ஏட்டுவின் மகன் மற்றும் தனது நண்பனுடன் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் இரண்டு சிறுவர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சக்தி மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் மற்றும் அவரது நண்பனுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.