வணிகம்
மலிபன் மற்றும் எஸ்எஸ்சி (SSC) இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபட்டுள்ளன

Sep 16, 2025 - 04:09 PM -

0

மலிபன் மற்றும் எஸ்எஸ்சி (SSC) இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபட்டுள்ளன

70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற பிஸ்கட் வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன் பிஸ்கட் மெனுபெக்டரீஸ் நிறுவனம், நாட்டிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விளையாட்டுக் கழகமான எஸ்எஸ்சி (Sinhalese Sports Club - SSC) உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மையின் மூலமாக, எஸ்எஸ்சி ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு மலிபன் ஆதரவை வழங்கவுள்ளதுடன், இலங்கையில் விளையாட்டுக்களை முன்னின்று அபிவிருத்தி செய்து, அடுத்த தலைமுறை திறமைசாலிகளை வளர்ப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

பல தசாப்தகால பெருமைமிக்க பாரம்பரியத்துடன், கிரிக்கெட் விளையாட்டுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ள நெகிழ்திறன், ஒற்றுமை, மற்றும் முன்னேற்றம் ஆகிய பண்புகளின் விழுமியங்களை மலிபன் எப்போதும் மதித்து வந்துள்ளது. எஸ்எஸ்சி உடனான இந்த ஒத்துழைப்பானது வெறுமனே அனுசரணை என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்று. தேசத்தில் விளையாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் பொதுவான குறிக்கோளைப் பகிர்ந்து கொண்டுள்ள புகழ்பூத்த இரு இலங்கை நிறுவனங்கள் ஒன்றாகக் கைகோர்க்கும் சிறப்பான தருணமாக இது மாறியுள்ளது. 

1899 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட எஸ்எஸ்சி கழகம் “இலங்கை கிரிக்கெட்டின் தாயகம்” என பரவலாக அங்கீகாரம் பெற்றுள்ளது. தேசத்தின் கிரிக்கெட் வரலாற்றைச் செதுக்குவதில் மூலகாரணமாகத் திகழ்ந்துள்ள இந்தக் கழகமானது, சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரையும் உருவாக்கியுள்ளது. அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, மற்றும் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட பல புகழ்பூத்த வீரர்கள் இலங்கை அணியின் தொப்பியை அணிவதற்கு முன்பதாக எஸ்எஸ்சி சீருடைகளை அணிந்தவர்கள் என்ற பெருமையைக் கொண்டுள்ளனர். இன்று இக்கழகமானது தொடர்ந்தும் இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்க்கும் தாயகமாகத் திகழ்ந்து வருவதுடன், எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்குவதற்கு வழிவகுத்து வருகின்றது. எஸ்எஸ்சி கழகத்தின் தலைவர் திரு. ரஞ்சித் பண்டிதகே அவர்கள் இந்த கூட்டாண்மையைப் போற்றிப் பாராட்டி கருத்து தெரிவிக்கையில்: 

“எமது கிரிக்கெட் அணிக்கு மனமுவந்து அனுசரணை வழங்க முன்வந்தமைக்காக மலிபன் நிறுவனத்திற்கு எஸ்எஸ்சி கழகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. விளையாட்டின் மகத்துவத்தை வளர்த்து, இலங்கை கிரிக்கெட்டின் பெருமைமிக்க பாரம்பரியங்களைக் கட்டிக்காப்பதில் பகிரப்பட்டுள்ள அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. கழகத்தின் கிரிக்கெட் சார்ந்த முயற்சிகளை மேம்படுத்தி, வெற்றியைத் தொடர்ந்தும் தக்கவைப்பதை முன்னெடுத்துச் செல்ல, இந்நிறுவனத்தின் பங்களிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும். மதிப்புமிக்க இந்த கூட்டாண்மையை எதிர்வரும் பருவகாலங்களிலும் மென்மேலும் கட்டியெழுப்ப நாம் ஆவலாக உள்ளோம்.” 

மலிபன் நிறுவனத்தின் குழும தொடர்பாடல்களுக்கான தலைமை அதிகாரி போசித பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து வெளியிடுகையில்: 

“விளையாட்டு சார்ந்த சந்தைப்படுத்தலின் ஆற்றல் வர்த்தகநாமங்களைக் கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, விளையாட்டு மற்றும் அதனை ஆடுகின்ற வீரர்களையும் மேம்படுத்துகின்றது என்பதை மலிபன் நிறுவனம் நன்கறியும். எஸ்எஸ்சி உடனான இக்கூட்டாண்மை கிரிக்கெட் கழகம் ஒன்றுடனான கூட்டு என்பதற்கும் அப்பாற்பட்டது. இலங்கை மக்கள் தமது திறமைகளையும், வாய்ப்புக்களையும் முழுமையாக வெளிக்கொண்டு வந்து அவற்றை நிலைநாட்டுவதற்கு வலுவூட்டுவதில் மலிபன் நிறுவனத்தின் நீண்ட கால நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு இல்லங்களிலும் நம்பிக்கைமிக்க நாமமாக மலிபன் திகழ்ந்து வருவதைப் போலவே, கிரிக்கெட்டின் மகத்துவத்தின் ஆரம்ப விதையை இடும் களமாக எஸ்எஸ்சி திகழ்ந்து வருகின்றது. ஒவ்வொரு பருவகாலத்தின் போதும் இலங்கை கிரிக்கெட்டின் பாரம்பரியம் மென்மேலும் வலுப்பெறும் வகையில் தொடர்ந்தும் வளர்ச்சி பெறுவதை உறுதி செய்து, இளம் திறமைசாலிகளுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வழிவகுப்பதை ஒன்றாக இணைந்து தோற்றுவிப்பதே எமது நோக்கம்.” 

எஸ்எஸ்சி கழகத்தின் கிரிக்கெட் சபைத் தலைவர் திரு. சமந்த தொடன்வெல அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: 

“எமது கூட்டாளர்களாக மலிபன் பிஸ்கட் நிறுவனத்தை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். நாட்டில் அனைத்து இல்லங்களிலும் மிகவும் அங்கீகாரம் பெற்றுள்ள வர்த்தகநாமங்களில் ஒன்றாக மலிபன் திகழ்ந்து வருவதாலும், இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் மிகவும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாக எஸ்எஸ்சி திகழ்ந்து வருவதாலும், இக்கூட்டாண்மை பாரிய கூட்டுப்பலத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய ஒத்துழைப்புக்கள், எமது நாட்டில் வலுவான விளையாட்டுக் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்க உதவும். வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் தமது கிரிக்கெட் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு நாம் பெற்றுக்கொள்ளும் நிதி உதவி நிச்சயமாக உதவும் என்பதில் சந்தேகம் கிடையாது.” 

இந்த ஒத்துழைப்பின் மூலமாக, இலங்கையில் விளையாட்டுக்களுக்கு ஆதரவளிப்பதில் முன்னோடி என்ற தனது வகிபாகத்தை மலிபன் வலுப்படுத்தியுள்ளது மாத்திரமன்றி, புதிய சாதனைகளை நிலைநாட்டுவதில் பெருமைமிக்க பாரம்பரியங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்எஸ்சி உடன் இணைந்து, தேசியக் கொடியை இன்னும் மகத்தான உச்சங்களில் பறக்கச் செய்வதற்கு அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகமளிப்பதே மலிபன் நிறுவனத்தின் நோக்கமாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05