Sep 16, 2025 - 05:46 PM -
0
செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு விசேட செயலமர்வினை அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தகச் சட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினூடாக (CLDP) இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் நடாத்தியது. துறைமுக சட்டம் மற்றும் அரச - தனியார் பங்காண்மைகளில் (PPPs) இலங்கையின் திறனை பலப்படுத்துவதை இந்நிகழ்ச்சித் திட்டம் இலக்காகக் கொண்டிருந்ததுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொது நலனைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அரசாங்கங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பான, அனுமதிப்பத்திர சட்டம் குறித்த ஒரு தொழில்நுட்ப பயிற்சியினையும் அது உள்ளடக்கியிருந்தது. நியாயமான மற்றும் திறந்த வணிக நடைமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளை, எதிர்கால உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் இலங்கை மக்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்குவதை உறுதிசெய்யும் இம்முன்முயற்சியானது, இலங்கையில் வலுவான நிறுவனங்களுக்கு உதவி செய்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினைப் பிரதிபலிக்கிறது.
இச்செயலமர்வின் மூலம் கிடைக்கும் பரஸ்பர நன்மைகள் குறித்து புகழ்ந்து பேசிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், “இந்தோ பசிபிக் பங்காளர்கள் என்ற வகையில், அமெரிக்காவும் இலங்கையும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், வர்த்தக வாய்ப்புகளைத் திறந்து வைப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றிற்கு உதவி செய்யும் பிரதான உட்கட்டமைப்புச் செயற் திட்டங்களை மேம்படுத்த உதவி செய்யும் அரச-தனியார் பங்காண்மைகள் அந்த முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். இச்செயலமர்வானது, சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியவற்றை இலங்கை நிபுணர்களுக்கு வழங்கி, எதிர்கால அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளை அதற்கு பெறுமதியான பயன்களை வழங்குவதையும் உறுதி செய்கிறது.
வலுவான சட்ட கட்டமைப்புகள் அமெரிக்க மற்றும் சரவ்தேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்து, அமெரிக்க மற்றும் ஏனைய பங்காளர்கள் இலங்கையின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இன்று நாம் ஒன்றிணைந்து கட்டமைக்கும் இவ்விடயமானது, நாளைய பகிரப்பட்ட பாதுகாப்பிற்கான ஒரு அடித்தளமாகும்.” எனக் குறிப்பிட்டார்.
துறைமுகச் சட்டத்திற்கும் அரச-தனியார் பங்காண்மைகளுக்கும் (PPPs) இடையிலான உறவில் கவனம் செலுத்தி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி, செயற்திறனுடைய சட்ட கட்டமைப்புகளின் முக்கியத்துவம் தொடர்பான ஒரு கண்ணோட்டத்துடன் மூன்று பகுதிகளைக் கொண்ட CLDP இனது பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கிறது.
இரண்டாவது அமர்வானது, வெற்றிகரமான சர்வதேச மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, பல்வேறு அணுகுமுறைகளின் நன்மை தீமைகளை எடைபோடுவதன் மூலம் அனுமதிப்பத்திர உடன்படிக்கைகளை ஆழமாக ஆராய்கிறது. இலங்கையின் தற்போதைய அனுமதிப்பத்திர உடன்படிக்கை கட்டமைப்பினை பிரிவு பிரிவாக விரிவாக மீளாய்வு செய்து, அதை சர்வதேச தராதரங்களுடன் ஒப்பிட்டு, கருத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய பகுதிகளை எடுத்துக்காட்டுவதுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைகிறது.
துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு என்பன இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் எவ்வளவு முக்கியமானவை என்பதை இப்பயிற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இது இலங்கையின் பொருளாதார மீட்சி, வர்த்தகம் மற்றும் தேசிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளை வெளிப்படைத்தன்மையுடைய நிலைபேறான பங்காண்மைகள், நியாயமான வணிக வாய்ப்புகள், பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகள் மற்றும் சுதந்திர மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் மேம்படுத்துகிறது.
அமெரிக்காவிலிருந்தான மற்றும் அமெரிக்காவை நோக்கிய சரக்குப் போக்குவரத்து உட்பட தெற்காசியாவினூடாக இடம்பெறும் பொருட் போக்குவரத்தின் ஒரு முக்கிய கேந்திரமாகிய கொழும்புத் துறைமுகம் இவ்வொத்துழைப்பின் மையமாக விளங்குகிறது. பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற, வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்ற மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கட்டியெழுப்புகின்ற நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக, அமெரிக்காவும் இலங்கையும் இந்தோ பசிபிக் பங்காளர்கள் என்ற வகையில் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன.