Sep 16, 2025 - 05:47 PM -
0
உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய ஜனாதிபதியாக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.
வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.
இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.
சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.