Header Logo
SLIC
கிழக்கு
தமிழ் - முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இணைந்துதான் செயற்பட வேண்டும்

Sep 17, 2025 - 09:38 AM

தமிழ் - முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இணைந்துதான் செயற்பட வேண்டும்
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 'தோப்பாகிய தனிமரம்' எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் 'ஓயாத புயலும் சாயாத மரமும்' எனும் நூலும் இதன் போது வெளியீட்டு வைக்கப்பட்டது. 

நூலின் முதற்பிரதியை முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீதின் மனைவி மற்றும் மகன் ஹக்கானி மஜீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

நூலாசிரியர் நபீல் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 

இங்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 20 ஆவது நினைவு தினப் பேருரையை 2020 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நிகழ்த்தியிருந்தேன். இன்று அன்னாரது 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவுப் பேருரை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த ரவூப் ஹக்கீமுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களும் நெருடல்களும் தொடர்ந்தும் நிலவி வருகிற காலத்தில் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது தடவையாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எனக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பை பெரும் கௌரவமாகவே நான் கருதுகிறேன். புட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும் நீத்துப் பெட்டி (குழல் புட்டு) அல்ல, எமது சமூகங்களின் உறவு என்றுமில்லாதவாறு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

ஆகையால், அந்த தலைப்பிலேயே இந்த நினைவுப் பேருரையை ஆற்றலாம் என்று எண்ணினேன். அதுவே பெருந் தலைவர் அஷ்ரபுக்குச் செய்யும் உயரிய அஞ்சலியாகவும் கருதுகிறேன். 

தமிழ் - முஸ்லிம் உறவு என்பது அந்த இரு சமூகங்களுக்கும் ஆக்சிஜன் போன்றது. முழு நாட்டின் சூழ்நிலைக்கும் இது பொருத்தமானது. என்றாலும், அதன் வெற்றியோ, தோல்வியோ கிழக்கிலே, அதுவும் அம்பாறை மாவட்டத்திலேயே நிச்சயப்படுத்தப்படும் என்பதை பெருந்தலைவர் அஷ்ரப் நன்கு அறிந்திருந்தார். 

தமிழ் பேசுகிற முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். ஆனால், அதே சமயத்தில் தமிழ் மக்களோடு பின்னிப்பிணைந்த ஓர் அடையாளத்தையே அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு. 

ஒன்று, தாய்மொழி என்கிற ஆழமான அடையாளம் தமிழ் பொதுவுடமை என்ற கவிதையிலே மாரட்டின் லூதர் கிங் ஐப் போல கனவொன்று கண்டேன் என்று ஆரம்பித்து ஏழுதிய கவிதையிலே அஷ்ரப் இதை எவ்வளவுக்கு அழுத்திக் கூறியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, தான் ஒரேயொரு ஆங்கிலக் கவிதை எழுதியதாகவும் ஆனால், சமூகத்துடன் எனது தாய் மொழியான தமிழில் தொடர்பு கொள்வது எனக்குப் பெரும் நிம்மதியைத் தருகிறது என்றும் எழுதியிருக்கிறார். 

அரசியல் கண்ணாடியூடாகப் பார்த்தாலும் உலகெங்கும் மொழி என்பதே அரசியல் ஆட்புலங்களை நிர்ணயம் செய்கிறது என்பது புலப்படும். உலக வரைபடத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகளை அவதானித்தால் இது தெளிவாகத் தெரியும். ஐரோப்பா இதற்கு நல்ல உதாரணம். தாய்மொழி அடிப்படையிலேயே சகல நாடுகளும் பிரிந்திருக்கின்றன. தனித்தனி நாடுகளாகப் பிரியாவிட்டாலும் சுவிட்ஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் சமஷ்டி அலகுகள் மொழி அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளன. 

எமது அண்டை நாடான இந்தியாவிலும் மொழிவாரியான மாநிலங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அலகுகள் அமைந்துள்ளன. இதற்கான காரணத்தை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். சமுக வாழ்விற்கு மொழி இன்றியமையாதது. ஒரு மொழி இல்லாமல் ஓர் அரசியல் அலகாக இயங்க முடியாது. மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி சம்பாஷித்து கலந்துரையாடி தங்களைத் தாங்களே ஆள்வதையே ஜனநாயகம் என்கிறோம். இதைச் செய்வதற்கு மொழி இன்றியமையாதது. 

மொழிபெயர்ப்போடு செய்யப்படும் கலந்துரையாடலையும் ஒரே மொழியில் நிகழும் சம்பாஷனையையும் ஒப்பிட முடியாது. அதுவும் ஆட்சி அதிகார விடயங்களில் மொழிபெயர்ப்பில் தங்கியிருப்பது ஆபத்தில் கூட முடியலாம். இலங்கை நாட்டில் இரண்டு தாய்மொழிகள் வழக்கத்தில் உள்ளன. ஆகவே, அரசியல் அலகுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்தப் பிரதான பிரிவு முக்கியத்துவம் பெறுகிறது. 

இரண்டாவது தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த நாட்டிலே எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். தமிழ் – முஸ்லிம் என்ற இரு சமுகங்களைச் சேர்த்துக் கணக்கிட்டாலும் பெரும்பான்மை சமூகத்தவர் எம்மை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கானவர்கள். அப்படியானதொரு சூழ்நிலையில் நாம் கூடியவரை சேர்ந்து இயங்குவதுதான் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பானது. அப்படியாக நாம் சேர்ந்து இயங்கும்போது எமக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மதித்து அவற்றையும் எமது தனியான அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டு இயங்க வேண்டும். 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்த நாட்டின் ஆட்சி முறை சமஷ்டியாக மாற்றப்பட வேண்டுமென்று கோரி தனிக் கட்சியாக உருவெடுத்த போதே ஒரு சுயாட்சி தமிழ் அரசும் ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவ வேண்டும் என்று இரண்டு அலகுகளாக எமது கட்சி யாப்பில் நோக்கம் என்ற தலைப்பின் கீழ் விதி 2 இலேயே கூறியுள்ளது. 

சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் தர்மலிங்கத்தின் நினைவு நாளில் நான் கூறியபடி 1971 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் எமது கட்சியின் மாதிரி அரசியல் யாப்பை முன் வைத்த போதும், இதே எண்ணத்தின் அடிப்படையிலே ஐந்து சமஷ்டி அலகுகளாக நாடு பிரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஐந்தும், தெற்கு, மேற்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், வட மத்திய வட மேல் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், மத்திய பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், வட, வட கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், தென்கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம் என்றும் இருந்ததை நான் நினைவுபடுத்தியிருந்தேன். 

இதே கோட்பாட்டின் அடிப்படையிலேதான் பெருந்தலைவர் அஷ்ரபுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பின்னைய நாட்களில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் ஒரு தெரிவாக தென்கிழக்கு அலகு இருந்தது. 

அஷ்ரப், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளிலே அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் அதைப் பெற்றுத் தருவான் என்று முழங்கியது எவரும் அறிந்ததே. ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்தியபோது அவர் அந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்று பயணிக்க ஆரம்பித்தார். 

இன்று தமிழ் மக்களும் அவர்களது தலைவர்களும் அதே நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறர்கள். இதிலே விசித்திரமான உண்மையொன்று என்னவென்றால், அந்த தேர்தலுக்குப் பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழர் விடுதலைக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் வடக்கு கிழக்கில் 50% இற்கு குறைவானதால் தனி நாட்டுக்கான ஆணை கிடைக்கவில்லை என்று கூறியபோது, அமர்தலிங்கம் கிழக்கிலே முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளிலும் புத்தளத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வியுற்றிருந்தாலும், அங்கு பெற்ற 26,496 மொத்த வாக்குகளையும் சேர்த்து 50% ஐ தாண்டியதாகக் காட்டியிருந்தார். இதிலேயும், தொகுதிகளிலே தோல்வியுற்றிருந்தாலும், அஷ்ரபின் பிரசாரத்தின் பலனாகவே எமக்கான ஆணையைக் காட்டக் கூடியதாக இருந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. 

2000 ஆகஸ்ட் 3 ஆம் திகதி சந்திரிகா அம்மையார் பெயரில் இல்லாவிட்டாலும் உள்ளடக்கத்தில் சமஷ்டியை ஒத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை பிரேரித்த போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கிற வரைக்கும் பேசுமாறு பணிக்கப்பட்டு 5 1/2 மணி நேரம் அஷ்ரப் உரையாற்றியதை எவரும் மறக்க முடியாது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தால் இன்று அப்படியான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உள்ளடங்களான ஆட்சி முறை இருந்திருக்கும். 

தந்தை செல்வா என்று நாம் அன்போடு அழைக்கும் எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எமக்கு மட்டும் தலைவரல்ல. பெருந் தலைவர் அஷ்ரபுக்கும் தந்தை செல்வாதான் தலைவர், அதற்கு அஷ்ரப் தந்தை செல்வா பற்றி ‘நான் எனும் நீ’ நூலில் எழுதிய கவிதைகள் அதற்குச் சான்று. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்துவார்கள். பல தடவைகளில் கல்முனை போன்ற தொகுதிகளில் தேசிய கட்சிகளின் இரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடையில் பலத்த போட்டி ஏற்பட்டால் எமது கட்சிக்காரர்கள் தந்தை செல்வாவிடம் வந்து இந்தத் தடவை நாம் தமிழர் ஒருவரை நிறுத்தினால் முஸ்லிம் வாக்குகள் பிரியும் போது தமிழர் வெல்ல வாய்ப்பு உண்டு என்று கூறுவார்களாம். 

ஆனால், அவரோ அதற்கு ஒருபோதும் இணங்கினதில்லை. அது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. வென்றாலும் தோல்வியுற்றாலும் ஒரு முஸ்லிமையே நிறுத்த வேண்டும் என்று கூறுவார். தமிழ் பேசும் மக்களாக ஒன்றாகப் பயணித்தாலும், இரு சமூகங்களினதும் தனித்துவத்தை மதித்து அதற்கு இடமளித்து இணைந்து செய்கிற பயணமாக அது இருக்க வேண்டும். இணைந்து செயற்படுவது அத்தியாவசியம். ஆனால், அந்த இணைவு பரஸ்பரம் எமது தனி அடையாளங்களை மதித்து அவற்றை வெளிப்படுத்துகிற விதமான அலகுகளையும் நாம் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். 

தனியான பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் போது வெட்டுப் புள்ளியின் விகிதாசாரத்தை 12.5% இலிருந்து 5% ஆக மாற்றிய பெருமை முற்று முழுதாக பெருந் தலைவர் அஷ்ரபையே சாரும். ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேசி பெரும் அழுத்தம் கொடுத்து அந்த மாற்றத்தை அரசியலமைப்பில் ஏற்படுத்தியவர். இது சிறுபான்மைக் கட்சிகளுக்கு மட்டுமல்ல. சென்ற வருடம் வரை சிறு கட்சியாக இருந்த ஜே.வி.பி. இற்கும் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. அந்த மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் தான் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவே முடிந்தது. 

அப்படி உள் நுழைந்தமையால் தான் இன்று ஆட்சிபீடம் ஏறக்கூடியதாக இருந்திருக்கிறது. இந்த விடயத்திலும் வேறு பல விடயங்களிலும் அஷ்ரப் பெரும்பான்மை சமூகத்தினரோடு பேரம் பேசுவது குறித்து பல பாடங்களை எங்களுக்குப் புகட்டிச் சென்றிருக்கிறார். இது விசேடமாக தமிழ் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்று, எதிர்காலத்தில் தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இதற்கு பெருந்தலைவர் அஷ்ரபினதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினதும் தீர்க்கதரிசனமான கடந்தகால செயற்பாடுகள் எமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அந்த முன் மாதிரிகளை பின்பற்றினாலேயே தமிழ் – முஸ்லிம் உறவின் மூலமாக எமது இரண்டு சமூகங்களினதும் இருப்பை நாம் உறுதி செய்வது மட்டுமன்றி, எம்மை நாமே ஆளக்கூடிய ஆட்சி முறையை இந்த நாட்டுக்குள்ளேயே ஏற்படுத்தலாம் என தெரிவித்தார். 

இந்நிகழ்வில் விவரணப்படம், நினைவேந்தல் பாடல், துஆப் பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், எம்.எஸ் அப்துல் வாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் தௌபீக், தேசிய காங்கிரஸ் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் தவிசாளர்கள், பிரதித்தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278