Sep 1, 2026 - 07:30 PM

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் அவசர மோதல் நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாகச் செயற்படுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்த கலந்துரையாடலில் இன்று (01) காலை மஹர சிறைச்சாலை வளாகத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் கடந்த காலத்தில் பாரிய பிரச்சினையாக இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை கடமையாற்றி அறிக்கைகளை விரைவாக வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தற்போது நிலுவையிலுள்ள அனைத்து அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளையும் வெளியிடுவதே இலக்கு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் கைப்பற்றப்படாத அளவிலான போதைப்பொருட்களை தற்போதைய அரசாங்கம் கைப்பற்றி வருவதாகத் தெரிவித்தார்.
சிறைச்சாலையிலுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லர் என்றும், சிலர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் செய்த தவறு காரணமாகச் சிறையிலிருப்பதால் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், கடந்த காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்களின் போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வலுவான பொறிமுறை தேவை என்பதால், இதுவரை 15 சிறைச்சாலைகளில் இவ்வாறான ஒருங்கிணைந்த பொறிமுறை நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறைச்சாலையொன்றில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதனைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குதல், அவசர நிலைமையின் போது பிரதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பைப்பேணி உடனடியாகச் செயற்படுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் ஆகியன இந்த பொறிமுறையின் முக்கிய நோக்கங்களாகும்.
இதற்கிடையில், அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பிரதான ஜெயிலர் அலுவலகம், புனர்வாழ்வுப் பிரிவு, பின்னல் பிரிவு மற்றும் நெசவுப் பிரிவு உள்ளிட்ட இடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்த சந்தர்ப்பத்தில், கடந்த மாதத்தில் மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான 500 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகிச் சென்ற பின்னர் மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடாமல் சமூகத்தில் நல்ல மனிதர்களாகச் செயற்படுமாறு அமைச்சர் கைதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என வலியுறுத்திய அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நாட்டின் எதிர்காலப் பயணத்திற்குப் பங்களிக்கக்கூடிய மனிதவளமாகச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



























