Sep 1, 2026 - 05:01 PM

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின்னர், அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (01) கருத்துத் தெரிவித்த அவர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் என குறிப்பிட்டார்.
இருப்பினும், தொடர்புடைய அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அப்பாற்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்று கூறிய அமைச்சர், மனுக்களைத் தாக்கல் செய்த அனைத்துத் தரப்பினரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இன்றிலிருந்து மூன்று வாரக் காலம் உயர் நீதிமன்றத்திற்கு அவகாசம் உள்ளதாகவும், அதனடிப்படையில் மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதித் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
"இந்த மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதுமானதா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவையா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும். எதிர்க்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ யாராவது கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதற்காக உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அப்பாற்பட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த யாராலும் முடியாது. அதை மனுத் தாக்கல் செய்த அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். தீர்ப்பைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இன்றிலிருந்து மூன்று வாரக் காலம் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளது. அதன் பிறகு பார்ப்போம். உயர் நீதிமன்றத்திடம் சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுவதற்கும், தேசிய மக்கள் சக்தியாக ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்களை நடத்துவதற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை." என்றார்.



























