Sep 1, 2026 - 10:04 PM

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதற்காக உயர் நீதிமன்ற பூரண அமர்வு (Full Bench) ஒன்றை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தலைமை நீதியரசர் உள்ளடங்கலாக ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இன்று (01) நிராகரித்தது.
22ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 67 மனுக்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமான போதே இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட அனைத்துக் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், தற்போதுள்ள ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்ற உத்தரவை பிரகடனப்படுத்தியது.
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர், அதாவது கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் அதன் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
இது தவிர, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சவால் விடுத்து 05 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மனுக்கள் தொடர்பாகக் கருத்தைத் தெரிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தினால் நேற்று மாலை சட்டமா அதிபருக்கு அறிவித்தல் (Notice) அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று காலையில் பரிசீலிக்கப்படத் தொடங்கின.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் அமைந்த ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.
நீதியரசர்கள் குழாமின் ஏனைய உறுப்பினர்களாக அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் செயற்படுகின்றனர்.
மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளடங்கலாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட மனுதாரர் தரப்பினரும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை உயர்நீதிமன்றின் 502ஆம் இலக்க மண்டபத்தில் இடம்பெற்றதுடன், அங்கு இடவசதி போதியதாக இன்மையால் அதனை 501ஆம் இலக்க மண்டபத்திற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு வழக்காக இது அமைவதனால், அனைவரும் செவிமடுக்கக் கூடிய வகையில் போதிய இடவசதி கொண்ட 501ஆம் மண்டபத்திற்கு மாற்றக் கோருவதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
அக்கோரிக்கையைப் பரிசீலித்த ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றின் 501ஆம் மண்டபத்திற்கு மாற்றத் தீர்மானித்தது.
அதன்பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தொடங்கியதுடன், இதன்போது மனுதாரரான இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து,
"கனம்பொருந்திய நீதியரசர்களே.. இது நேரடியாக நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதிக்கும் ஒரு சட்டமூலமாகும். இதன் மூலம் தலைமை நீதியரசரின் பதவிக் காலம் இரண்டு வருடங்களால் நீடிக்கின்றது. ஏனைய நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதும் அதிகரிக்கின்றது. இதனால் நலன்களுக்கு இடையிலான முரண்பாடு இச்சந்தர்ப்பத்தில் எழுகின்றது. அந்நிலையைக் கருத்திற்கொண்டு இச்சட்டமூலம் தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களையும் கொண்ட பூரண அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டார்.
இது தவிர, மேலும் பல மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெப்ரி அழகரட்னம், எராஜ் சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தேகொட, மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் இக்கோரிக்கை தொடர்பாக மேலதிகக் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமை நியமிக்கும் அதிகாரம் தலைமை நீதியரசருக்கே உரித்தானது எனச் சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்களையும் பரிசீலித்த தலைமை நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தனது உத்தரவைப் பிரகடனப்படுத்தி, குறித்த மனுக்களை பூரண அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தது.
அதற்கமைய, தற்போதுள்ள நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே இம்மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் பின்வருமாறு வாதிட்டார்.
"முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் உள்ள பல உறுப்புரைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக 03ஆவது உறுப்புரை மீறப்படுகின்றது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அமைச்சரவை இச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுப்ப தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பின் 03 மற்றும் 04ஆவது உறுப்புரைகள் மக்கள் இறைமையுடன் நேரடியாகத் தொடர்புபட்டவை. அரசியலமைப்பின் 04ஆவது உறுப்புரையில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் 03ஆவது உறுப்புரையைப் பாதிக்கும். அரசியலமைப்பின் 04ஆவது உறுப்புரையின் மூலம் மக்கள் இறைமையானது நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஊடாகச் செயற்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சர் விஜித ஹேரத் எதிர்க்கட்சியில் இருந்தபோது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தனிநபர் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்தார். ஆனால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. 2022ஆம் ஆண்டின் உள்நாட்டு வருமானச் சட்டமூலம் தொடர்பான தீர்ப்பில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் அறிவித்தது. இதன் தீவிரத்தன்மை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இறுதியாக இந்த விடயம் குறித்து விவாதிக்க சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பொது சபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாயிற்று. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆறு நீதியரசர்கள் ஓய்வுபெற்றனர். இரண்டு தலைமை நீதியரசர்கள் ஓய்வுபெற்றனர். இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தின் சுயாதீனம் மீறப்படும்," எனக் கூறினார்.
அதன்பின்னர் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,
"நீதியரசர்கள் சுதந்திரமாகத் தமது கடமைகளை ஆற்றுவதற்கான சூழல் நிலவ வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்பதற்காக அந்தச் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்பட முடியாது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க நேரிட்டமைக்காக நான் வருந்துகிறேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டியுள்ளது. உங்கள் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவே இது செய்யப்படுகிறது. நிறைவேற்றுத்துறை இந்த முறையில் உங்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கக் கூடாது. நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதைக் குறைப்பதனால் மட்டுமன்றி, அதனை அதிகரிப்பதனாலும் கூட நீதிமன்றத்தின் சுயாதீனம் மீறப்படுகின்றது. இலங்கை தெற்காசியாவின் மிகப்பழைமையான ஒரு நாடாகும். நமக்கு சீனா அல்லது வியட்நாமாக மாற வேண்டிய அவசியமில்லை," எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும் பல மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேராவும் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார்.
"சட்டத்தில் மிகவும் முக்கியமானதொரு கோட்பாடு உள்ளது. நீதியரசர் ஒருவர் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயம் குறித்து அவரே தீர்ப்பு வழங்குவது பொருத்தமற்றது என்பதாகும். இச்சட்டமூலத்தின் மூலம் இந்நீதிமன்ற நீதியரசர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதனால் இம்மனுக்களை நீங்கள் விசாரிப்பது பொருத்தமானதல்ல. அப்படியாயின் அடுத்தகட்ட மாற்று வழி என்ன? அதுதான் சர்வஜன வாக்கெடுப்பு," எனக் கூறினார்.



























