Sep 17, 2025 - 12:13 PM -
0
கடந்த 15 ஆம் திகதி (திங்கட்கிழமை) திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடத்தினை இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உத்தியேகபூர்வமாக திறந்து வைத்தது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான கேர்ணல் மெத்திவ் ஹவ்ஸ், இலங்கை கடற்படையின் பயிற்சிகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்த்தன, இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கட்டளைத்தளபதி கொமடோர் தினேஷ் பண்டார ஆகியோர் இந்த அதிநவீன வளாகத்தினைத் திறந்து வைத்தனர்.
உயர்தர பல்லூடக தொழில்நுட்பம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மொழி நிறுவனத்தின் சமீபத்திய பயிற்சி மென்பொருள் ஆகியவற்றைக் கொண்ட இவ்வாங்கில மொழி ஆய்வுகூடமானது, இலங்கை கடற்படை அதிகாரிகள், சர்வதேச கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படும் பொதுவான மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான கருவிகளை வழங்கும்.
திங்கட்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய லெஃப்டினன் கேர்ணல் மெத்திவ் ஹவ்ஸ் இந்த ஆங்கில மொழி ஆய்வு கூடத்தின் ஆரம்பம் தொடர்பில் கருத்துரைத்தார்,
“2020 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினர் விடுத்த ஒரு வேண்டுகோளின் பேரில் இச்செயற்திட்டம் ஆரம்பமானது. அதை நனவாக்குவதற்காக நாங்கள் ஒன்றிணைந்து சவால்களைத் தாண்டிச் சென்றோம். இன்று, அமெரிக்க பாதுகாப்பு மொழி நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில கற்றல் கருவிகளைக் கொண்ட ஒரு அதிநவீன ஆய்வுகூடத்தை நாம் திறக்கிறோம். எதிர்கால திறனைக் கட்டியெழுப்புவதற்காகவும், இன்று நாம் ஒன்றிணைந்து எதை உருவாக்குகிறோமோ அது நாளைய அமைதியினைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காகவும் இலங்கையுடன் நாம் கொண்டுள்ள எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு அடையாளமாக, வகுப்பறையை விட மேலான இவ்வாங்கில மொழி ஆய்வுகூடம் விளங்குகிறது.
மொழி என்பது தொடர்பாடலை விட மேலானதாகும் அது ஒரு தொடர்பாகும். ஒரே மொழியைப் பேசுவதன் மூலம், எமது படையினர்களுக்கிடையே நம்பிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலை ஆழப்படுத்துகிறோம். இதன் மூலம் இராணுவங்களுக்கிடையே மட்டுமன்றி, நாடுகளுக்கிடையேயும் நாம் பாலங்களை உருவாக்குகிறோம்.” எனத் தெரிவித்தார்.
எதிர்காலத் தலைவர்களை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்காக வன்பொருள்களைத் தாண்டி அமெரிக்க - இலங்கை உறவுகள் எவ்வாறு நீண்டுள்ளன என்பதை இந்தப் புதிய வளாகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க மற்றும் பிராந்திய பங்காளர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், மிகவும் வினைத்திறனுடன் இயங்குவதற்கும் உதவும் வகையில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் திறன்களை பலப்படுத்துவதற்காக இவ்வாங்கில மொழி ஆய்வுகூடம் பயன்படுத்தப்படும்.
துறைமுகங்களில் முதலீடு செய்வது முதல் மக்களில் முதலீடு செய்வது வரை, மிகவும் பாதுகாப்பான மற்றும் இணைக்கப்பட்ட ஒரு எதிர்காலத்தினை உறுதிசெய்வதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை இந்தோ - பசிபிக் உறவுகள் எடுத்துக்காட்டுகின்றன.