Sep 17, 2025 - 05:44 PM -
0
தேர்லுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ஸ, ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு சவால் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு திருத்தத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (17) காலை கிழக்கு மாகாண மட்டக்களப்பு கட்டடங்கள் திணைக்களத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மக்களின் வீடுகளை திருத்துவதற்காக 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு அவை வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 216 பயனாளிகளில் இன்று 91 பயனாளிகளுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் ஞா.சுகுமாரன் (பொறியியலாளர்), திணைக்கள ஊழியர்கள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளுக்கான திருத்த வேலைக்கான நிதி வழங்கப்பட்டிருந்தது அதனை 216 பயனாளிகளுக்கு நாங்கள் அதற்கான நிதி உதவியினை செய்திருந்தோம்.
தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகவும், அமைச்சுகளின் ஊடாகவும் அதே நேரம் மாகாண சபை ஊடாகவும் நிதிகளை விடுவிப்பு செய்து அதன் ஊடாக எமது பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவற்றை செய்து கொண்டு வருகின்றோம்.
நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக செய்து வருகின்ற நேரங்களில் எங்களுக்கு எதிராக எதிர்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதில் எங்களது அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் சொத்து விவரங்கள் தொடர்பான விமர்சனங்கள் பேசப்பட்டு கொண்டு வருகின்றது.
வசந்த விக்ரமசிங்க அவர்களது சொத்து விபரம் தொடர்பாக இன்று எதிர்க்கட்சியினர் குத்துச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறாக இருந்தாலும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சரி இப்போதும் சரி, எங்களது சொத்து விவரங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
எங்களது சொத்து விவரங்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரும் வெளிப்படுத்தி இருந்தோம் தேர்தலுக்கு பின்னரும் பதவிகளை பொறுப்பேற்றதன் பின்னரும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகின்றோம்.
எதிர்க்கட்சியினரிடம் நாங்கள் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றோம். முடியுமாக இருந்தால் உங்களது சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா? இயலும் என்றால் வெளிப்படுத்தி காட்டுங்கள்.
விஷேடமாக நாமல் ராஜபக்சவாக இருக்கட்டும் ஏனைய அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அவர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்களாக இருந்தால் அது தொடர்பாக மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் அவர்களது போலி குற்றச்சாட்டுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதனை.
கடந்த காலங்களில் பல மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மோசமான முறையில் சொத்துக்களை சேகரித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் நடிப்பதற்கு முற்படுகின்றார்கள் ஆனாலும் மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் இவர்கள் யார் என்பதனை. ஆகவே மக்கள் வெகு விரைவில் அவர்களுக்கான பதிலடியினை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.
--