விளையாட்டு
ஆசிய கிண்ணத் தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்?

Sep 17, 2025 - 07:38 PM -

0

ஆசிய கிண்ணத் தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்?

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி கைகுலுக்குவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. 

இதனையடுத்து அன்றைய போட்டியில் நடுவராக இருந்த எண்டி பைகிரப்ட் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியிருந்தது. 

எனவே அவரை ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து விலக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ்தான் கோரியிருந்தது. 

எனினும் அதற்கான எவ்வித முடிவும் இதுவரை எட்டப்படாத நிலையில் அதனை கண்டிக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இன்று (17) இடம்பெறவிருந்த போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி இன்னும் மைதானத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பாகிஸ்தான் அணி ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து வௌியேறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணி அவர்கள் தங்கியுள்ள விடுதியில் இருந்து சற்று முன்னரே வௌியாகியுள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உரிய நேரத்திற்கு பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வராமையினால் நாணய சுழற்சியும் ஒரு மணித்தியாலம் வரை தாமதமாகியுள்ளதுடன் போட்டியையும் உரிய நேரத்திற்கு ஆரம்பிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவின் பஹல்காமில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குலில் பலர் கொல்லப்பட்டமையினால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்தியா அணி புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். 

எனினும் அது விதிமுறைகளுக்கு முரணானது என்பதால் குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்தது. 

எனினும் போட்டி நிறைவடைந்ததன் பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி வீரர்கள் மறுத்திருந்தனர். 

இந்த செயற்பாடு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05